ஏசாயா 33:10-16 தமிழ்

10 இப்பொழுது எழுந்தருளுவேன், இப்பொழுது உயருவேன், இப்பொழுது மேன்மைப்படுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

11 பதரைக் கர்ப்பந்தரித்துத் தாளடியைப் பெறுவீர்கள்; அக்கினியைப் போல் உங்கள் சுவாசமே உங்களைப் பட்சிக்கும்.

12 ஜனங்கள் சுண்ணாம்பைப்போல நீற்றப்படுவார்கள்; வெட்டப்பட்ட முட்செடிகளைப்போலத் தீயில் எரிக்கப்படுவார்கள்.

13 தூரத்திலுள்ளவர்களே, நான் செய்கிறதைக் கேளுங்கள்; சமீபத்திலிருக்கிறவர்களே, என் பராக்கிரமத்தை அறிந்துகொள்ளுங்கள் என்கிறார்.

14 சீயோனிலுள்ள பாவிகள் திகைக்கிறார்கள்; மாயக்காரரை நடுக்கம்பிடிக்கிறது; பட்சிக்கும் அக்கினிக்கு முன்பாக நம்மில் தரித்திருப்பவன் யார்? நித்தியஜூவாலைக்கு முன்பாக நம்மில் தாபரிப்பவன் யார் என்கிறார்கள்.

15 நீதியாய் நடந்து, செம்மையானவைகளைப் பேசி, இடுக்கண் செய்வதால் வரும் ஆதாயத்தை வெறுத்து, பரிதானங்களை வாங்காதபடிக்குத் தன் கைகளை உதறி, இரத்தஞ்சிந்துவதற்கான யோசனைகளைக் கேளாதபடிக்குத் தன் செவியை அடைத்து, பொல்லாப்பைக் காணாதபடிக்குத் தன் கண்களை மூடுகிறவனெவனோ,

16 அவன் உயர்ந்த இடங்களில் வாசம்பண்ணுவான்; கன்மலைகளின் அரண்கள் அவனுடைய உயர்ந்த அடைக்கலமாகும்; அவன் அப்பம் அவனுக்குக் கொடுக்கப்படும்; அவன் தண்ணீர் அவனுக்கு நிச்சயமாய்க் கிடைக்கும்.