தானியேல் 10:11-17 தமிழ்

11 அவன் என்னை நோக்கி: பிரியமான புருஷனாகிய தானியேலே, நான் இப்போது உன்னிடத்திற்கு அனுப்பப்பட்டு வந்தேன்; ஆதலால், நான் உனக்குச் சொல்லும் வார்த்தைகளின்பேரில் நீ கவனமாயிருந்து, கால் ஊன்றி நில் என்றான்; இந்த வார்த்தையை அவன் என்னிடத்தில் சொல்லுகையில் நடுக்கத்தோடே எழுந்து நின்றேன்.

12 அப்பொழுது அவன் என்னை நோக்கி: தானியேலே, பயப்படாதே; நீ அறிவை அடைகிறதற்கும், உன்னை உன்னுடைய தேவனுக்கு முன்பாகச் சிறுமைப்படுத்துகிறதற்கும், உன் மனதைச் செலுத்தின முதல்நாள் துவக்கி உன் வார்த்தைகள் கேட்கப்பட்டது; உன் வார்த்தைகளினிமித்தம் நான் வந்தேன்.

13 பெர்சியா ராஜ்யத்தின் அதிபதி இருபத்தொரு நாள்மட்டும் என்னோடு எதிர்த்து நின்றான்; ஆனாலும் பிரதான அதிபதிகளில் ஒருவனாகிய மிகாவேல் எனக்கு உதவியாக வந்தான்; ஆதலால் நான் அங்கே பெர்சியாவின் ராஜாக்களிடத்தில் தரித்திருந்தேன்.

14 இப்போதும் கடைசி நாட்களில் உன் ஜனங்களுக்குச் சம்பவிப்பதை உனக்குத் தெரியப்பண்ணும்படிக்கு வந்தேன்; இந்தத் தரிசனம் நிறைவேற இன்னும் நாள் செல்லும் என்றான்.

15 அவன் இந்த வார்த்தைகளை என்னோடே சொல்லுகையில், நான் தலைகவிழ்ந்து, தரையை நோக்கி, பேச்சற்றுப்போனேன்,

16 அப்பொழுது மனுபுத்திரரின் சாயலாகிய ஒருவன் என் உதடுகளைத் தொட்டான்; உடனே நான் என்வாயைத் திறந்து பேசி, எனக்கு எதிரே நின்றவனை நோக்கி: என் ஆண்டவனே, தரிசனத்தினால் என் மூட்டுகள் புரண்டன, பெலனற்றுப்போனேன்.

17 ஆகையால் என் ஆண்டவனுடைய அடியேன் என் ஆண்டவனோடே பேசக்கூடுவதெப்படி? இனி என்னில் பெலனில்லை, என்னில் மூச்சுமில்லை என்றேன்.