தானியேல் 2:10-16 தமிழ்

10 கல்தேயர் ராஜசமுகத்தில் பிரதியுத்தரமாக: ராஜா கேட்கும் காரியத்தை அறிவிக்கத்தக்க மனுஷன் பூமியில் ஒருவனும் இல்லை; ஆகையால் மகத்துவமும் வல்லமையுமான எந்த ராஜாவும் இப்படிப்பட்ட காரியத்தை ஒரு சாஸ்திரியினிடத்திலாவது ஜோசியனிடத்திலாவது கல்தேயனிடத்திலாவது கேட்டதில்லை.

11 ராஜா கேட்கிற காரியம் மிகவும் அருமையானது; மாம்சமாயிருக்கிறவர்களோடே வாசம்பண்ணாத தேவர்களேயொழிய ராஜசமுகத்தில் அதை அறிவிக்கத்தக்கவர் ஒருவரும் இல்லை என்றார்கள்.

12 இதினிமித்தம் ராஜா மகா கோபமும் உக்கிரமுங்கொண்டு, பாபிலோனில் இருக்கிற எல்லா ஞானிகளையும் கொலைசெய்யும்படி கட்டளையிட்டான்.

13 ஞானிகளைக் கொலைசெய்யவேண்டுமென்கிற கட்டளை வெளிப்பட்டபோது, தானியேலையும் அவன் தோழரையும் கொலைசெய்யத் தேடினார்கள்.

14 பாபிலோனின் ஞானிகளைக் கொலைசெய்யப் புறப்பட்ட ராஜாவினுடைய தலையாரிகளுக்கு அதிபதியாகிய ஆரியோகோடே தானியேல் யோசனையும் புத்தியுமாய்ப் பேசி:

15 இந்தக் கட்டளை ராஜாவினால் இத்தனை அவசரமாய்ப் பிறந்ததற்குக் காரணம் என்ன என்று ராஜாவின் சேர்வைக்காரனாகிய ஆரியோகினிடத்தில் கேட்டான்; அப்பொழுது ஆரியோகு தானியேலுக்குக் காரியத்தை அறிவித்தான்.

16 தானியேல் ராஜாவினிடத்தில் போய், சொப்பனத்தின் அர்த்தத்தை ராஜாவுக்குக் காண்பிக்கும்படித் தனக்குத் தவணைகொடுக்க விண்ணப்பம்பண்ணினான்.