தானியேல் 4:20-26 தமிழ்

20 நீர் கண்ட விருட்சம் வளர்ந்து பலத்து, தேசத்தின் எல்லைபரியந்தம் காணப்படத்தக்கதாக அதின் உயரம் வானபரியந்தம் எட்டினது.

21 அதின் இலைகள் நேர்த்தியும், அதின் கனி மிகுதியுமாயிருந்தது; எல்லா ஜீவனுக்கும் அதில் ஆகாரம் உண்டாயிருந்தது; அதின்கீழே வெளியின் மிருகங்கள் தங்கினது, அதின் கொப்புகளில் ஆகாயத்துப் பட்சிகள் தாபரித்தது.

22 அது பெரியவரும் பலத்தவருமாயிருக்கிற ராஜாவாகிய நீர்தாமே; உமது மகத்துவம் பெருகி வானபரியந்தமும், உமது கர்த்தத்துவம் பூமியின் எல்லைபரியந்தமும் எட்டியிருக்கிறது.

23 இந்த விருட்சத்தை வெட்டி, இதை அழித்துப்போடுங்கள்; ஆனாலும் இதின் வேர்களாகிய அடிமரம் தரையில் இருக்கட்டுமென்றும், இரும்பும் வெண்கலமுமான விலங்கு இடப்பட்டு, வெளியின் பசும்புல்லிலே தங்கி, ஆகாயத்துப் பனியில் நனைவதாக; ஏழு காலங்கள் அவன்மேல் கடந்துபோகுமட்டும் மிருகங்களோடே அவனுடைய பங்கு இருக்கக்கடவதென்றும், வானத்திலிருந்து இறங்கிச் சொன்ன பரிசுத்த காவலாளனை ராஜாவாகிய நீர் கண்டீரே.

24 ராஜாவே, அதின் அர்த்தமும் ராஜாவாகிய என் ஆண்டவன்பேரில் வந்த உன்னதமானவருடைய தீர்மானமும் என்னவென்றால்: மனுஷரினின்று நீர் தள்ளிவிடப்படுவீர்; வெளியின் மிருகங்களோடே சஞ்சரிப்பீர்; மாடுகளைப்போலப் புல்லைமேய்ந்து, ஆகாயத்துப் பனியிலே நனைவீர்.

25 உன்னதமானவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகைசெய்து, தமக்குச் சித்தமாயிருக்கிறவனுக்கு அதைக்கொடுக்கிறார் என்பதை நீர் அறிந்துகொள்ளுமட்டும் ஏழு காலங்கள் உம்முடைய பேரில் கடந்துபோகவேண்டும்.

26 ஆனாலும் விருட்சத்தின் வேர்களாகிய அடிமரம் தரையில் இருக்கட்டும் என்று சொல்லப்பட்டது என்னவென்றால்: நீர் பரம அதிகாரத்தை அறிந்தபின், ராஜ்யம் உமக்கு நிலைநிற்கும்.