21 அவர் மனுஷரினின்று தள்ளப்பட்டார்; அவருடைய இருதயம் மிருகங்களுடைய இருதயம் போலாயிற்று; காட்டுக்கழுதைகளோடே சஞ்சரித்தார்; உன்னதமான தேவன் மனுஷரின் ராஜ்யத்தில் ஆளுகை செய்து, தமக்குச் சித்தமானவனை அதின்மேல் அதிகாரியாக்குகிறார் என்று அவர் உணர்ந்துகொள்ளுமட்டும் மாடுகளைப்போல் புல்லை மேய்ந்தார்; அவருடைய சரீரம் ஆகாயத்துப் பனியிலே நனைந்தது.
22 அவருடைய குமாரனாகிய பெல்ஷாத்சார் என்னும் நீரோவென்றால், இதையெல்லாம் அறிந்திருந்தும், உமது இருதயத்தைத் தாழ்த்தாமல்,
23 பரலோகத்தின் ஆண்டவருக்கு விரோதமாக உம்மை உயர்த்தினீர்; அவருடைய ஆலயத்தின் பாத்திரங்களை உமக்கு முன்பாக கொண்டுவந்தார்கள்; நீரும், உம்முடைய பிரபுக்களும், உம்முடைய மனைவிகளும், உம்முடைய வைப்பாட்டிகளும் அவைகளில் திராட்சரசம் குடித்தீர்கள்; இதுவுமன்றி தம்முடைய கையில் தமது சுவாசத்தை வைத்திருக்கிறவரும், உமது வழிகளுக்கு எல்லாம் அதிகாரியுமாகிய தேவனை நீர் மகிமைப்படுத்தாமல் காணாமலும், கேளாமலும், உணராமலும், இருக்கிற வெள்ளியும் பொன்னும் வெண்கலமும் இரும்பும் மரமும் கல்லுமாகிய தேவர்களைப் புகழ்ந்தீர்.
24 அப்பொழுது அந்தக் கையுறுப்பு அவரால் அனுப்பப்பட்டு, இந்த எழுத்து எழுதப்பட்டது.
25 எழுதப்பட்ட எழுத்து என்னவென்றால்: மெனே, மெனே, தெக்கேல், உப்பார்சின் என்பதே.
26 இந்த வசனத்தின் அர்த்தமாவது: மெனே என்பதற்கு, தேவன் உன் ராஜ்யத்தை மட்டிட்டு, அதற்கு முடிவுண்டாக்கினார் என்றும்,
27 தெக்கேல் என்பதற்கு, நீ தராசிலே நிறுக்கப்பட்டு, குறையக் காணப்பட்டாய் என்றும்,