நியாயாதிபதிகள் 3:9-15 தமிழ்

9 இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டபோது, கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை இரட்சிக்கும்படி காலேபின் தம்பியான கேனாசுடைய குமாரனாகிய ஒத்னியேல் என்னும் ஒரு இரட்சகனை அவர்களுக்கு எழும்பப்பண்ணினார்.

10 அவன்மேல் கர்த்தருடைய ஆவி வந்திருந்ததினால், அவன் இஸ்ரவேலை நியாயம் விசாரித்து, யுத்தம்பண்ணப் புறப்பட்டான்; கர்த்தர் மெசொப்பொத்தாமியாவின் ராஜாவாகிய கூசான்ரிஷதாயீமை அவன் கையிலே ஒப்புக்கொடுத்தார்; ஆகையால் அவன் கை கூசான்ரிஷதாயீமின்மேல் பலங்கொண்டது.

11 தேசம் நாற்பது வருஷம் அமைதலாயிருந்தது. கேனாசின் குமாரனாகிய ஒத்னியேல் மரணமடைந்தான்.

12 இஸ்ரவேல் புத்திரர் மறுபடியும் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தார்கள்; அவர்கள் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தபடியால், கர்த்தர் எக்லோன் என்னும் மோவாபின் ராஜாவை இஸ்ரவேலுக்கு விரோதமாய்ப் பலக்கப்பண்ணினார்.

13 அவன் அம்மோன் புத்திரரையும் அமலேக்கியரையும் கூட்டிக்கொண்டு வந்து, இஸ்ரவேலை முறிய அடித்தான்; பேரீச்சமரங்களின் பட்டணத்தையும் பிடித்தான்.

14 இப்படியே இஸ்ரவேல் புத்திரர் எக்லோன் என்னும் மோவாபின் ராஜாவைப் பதினெட்டு வருஷம் சேவித்தார்கள்.

15 இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டபோது, கர்த்தர் அவர்களுக்குப் பென்யமீன் கோத்திரத்தானாகிய கேராவின் மகன் ஏகூத் என்னும் இரட்சகனை எழும்பப்பண்ணினார்; அவன் இடதுகைப் பழக்கமுள்ளவனாயிருந்தான்; அவன் கையிலே இஸ்ரவேல் புத்திரர் மோவாபின் ராஜாவாகிய எக்லோனுக்குக் காணிக்கை அனுப்பினார்கள்.