நீதிமொழிகள் 26:2-8 தமிழ்

2 அடைக்கலான் குருவி அலைந்துபோவதுபோலும், தகைவிலான் குருவி பறந்து போவதுபோலும், காரணமில்லாமலிட்ட சாபம் தங்காது.

3 குதிரைக்குச் சவுக்கும், கழுதைக்குக் கடிவாளமும், மூடனுடைய முதுகுக்குப் பிரம்பும் ஏற்றது.

4 மூடனுக்கு அவன் மதியீனத்தின்படி மறுஉத்தரவு கொடாதே; கொடுத்தால் நீயும் அவனைப் போலாவாய்.

5 மூடனுக்கு அவன் மதியீனத்தின்படி மறுஉத்தரவு கொடு; கொடாவிட்டால் அவன் தன் பார்வைக்கு ஞானியாயிருப்பான்.

6 மூடன் கையிலே செய்தி அனுப்புகிறவன் தன் கால்களையே தறித்துக்கொண்டு நஷ்டத்தை அடைகிறான்.

7 நொண்டியின் கால்கள் குந்திக்குந்தி நடக்கும், அப்படியே மூடரின் வாயிலுள்ள உவமைச்சொல்லும் குந்தும்.

8 மூடனுக்குக் கனத்தைக் கொடுக்கிறவன் கவணிலே கல்லைக்கட்டுகிறவன்போலிருப்பான்.