புலம்பல் 1:5-11 தமிழ்

5 அவள் சத்துருக்கள் தலைமையானார்கள், அவள் பகைஞர் சுகித்திருக்கிறார்கள்; அவளுடைய திரளான பாதகங்களினிமித்தம் கர்த்தர் அவளைச் சஞ்சலப்படுத்தினார்; அவள் பிள்ளைகள் சத்துருவுக்கு முன்பாகச் சிறைப்பட்டுப்போனார்கள்.

6 சீயோன் குமாரத்தியின் அழகெல்லாம் அவளை விட்டுப்போயிற்று; அவள் பிரபுக்கள் மேய்ச்சலைக் காணாத மான்களுக்கு ஒப்பாகி, தொடருகிறவனுக்கு முன்பாகச் சத்துவமில்லாமல் நடந்துபோனார்கள்.

7 தனக்குச் சிறுமையும் தவிப்பும் உண்டாகிய நாட்களிலே எருசலேம் பூர்வநாட்கள் முதற்கொண்டு தனக்கு உண்டாயிருந்த இன்பமானவைகளையெல்லாம் நினைக்கிறாள்; அவளுக்கு உதவிசெய்வார் இல்லாமல் அவளுடைய ஜனங்கள் சத்துருவின் கையிலே விழுகையில், பகைஞர் அவளைப் பார்த்து, அவளுடைய ஓய்வு நாட்களைக் குறித்துப் பரியாசம்பண்ணினார்கள்.

8 எருசலேம் மிகுதியாய்ப் பாவஞ்செய்தாள்; ஆதலால் தூரஸ்திரீயைப்போலானாள்; அவளைக் கனம்பண்ணினவர்கள் எல்லாரும் அவளை அசட்டைபண்ணுகிறார்கள்; அவளுடைய மானத்தைக் கண்டார்கள்; அவளும் பெருமூச்சுவிட்டுப் பின்னிட்டுத் திரும்பினாள்.

9 அவளுடைய அசூசம் அவள் வஸ்திர ஓரங்களில் இருந்தது; தனக்கு வரப்போகிற முடிவை நினையாதிருந்தாள்; ஆகையால் அதிசயமாய்த் தாழ்த்தப்பட்டுப்போனாள்; தேற்றுவார் இல்லை; கர்த்தாவே, என் சிறுமையைப் பாரும்; பகைஞன் பெருமைபாராட்டினானே.

10 அவளுடைய இன்பமான எல்லாவற்றின்மேலும் சத்துரு தன் கையை நீட்டினான்; உம்முடைய சபையிலே வரலாகாதென்று தேவரீர் விலக்கிய புறஜாதியார் உமது பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசித்ததைக் கண்டாள்.

11 அவளுடைய ஜனங்களெல்லாரும் அப்பந்தேடித் தவிக்கிறார்கள்; தங்கள் உயிரைக் காப்பாற்றத் தங்களுடைய இன்பமானவைகளை ஆகாரத்துக்கென்று கொடுத்துவிட்டார்கள்; கர்த்தாவே, நோக்கிப்பாரும்; எண்ணமற்றவளானேனே.