யாத்திராகமம் 12:2-8 தமிழ்

2 இந்த மாதம் உங்களுக்குப் பிரதான மாதம்; இது உங்களுக்கு வருஷத்தின் முதலாம் மாதமாயிருப்பதாக.

3 நீங்கள் இஸ்ரவேல் சபையார் யாவரையும் நோக்கி: இந்த மாதம் பத்தாம் தேதியில் வீட்டுத்தலைவர்கள், வீட்டுக்கு ஒரு ஆட்டுக்குட்டியாக, ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆட்டுக்குட்டியைத் தெரிந்து கொள்ளக்கடவர்கள்.

4 ஒரு வீட்டில் இருக்கிறவர்கள் ஒரு ஆட்டுக்குட்டியைப் புசிக்கிறதற்குப் போதுமான பேர்களாயிராமற்போனால், அவனும் அவன் சமீபத்திலிருக்கிற அவனுடைய அயல்வீட்டுக்காரனும், தங்களிடத்திலுள்ள ஆத்துமாக்களின் இலக்கத்திற்குத்தக்கதாக ஒரு ஆட்டுக்குட்டியைத் தெரிந்துகொள்ளவேண்டும்; அவனவன் புசிப்புக்குத்தக்கதாக இலக்கம் பார்த்து, ஆட்டுக்குட்டியைத் தெரிந்து கொள்ளவேண்டும்.

5 அந்த ஆட்டுக்குட்டி பழுதற்றதும் ஆணும் ஒருவயதுள்ளதுமாய் இருக்கவேண்டும்; செம்மறியாடுகளிலாவது வெள்ளாடுகளிலாவது அதைத் தெரிந்து கொள்ளலாம்.

6 அதை இந்த மாதம் பதினாலாம் தேதிவரைக்கும் வைத்திருந்து, இஸ்ரவேல் சபையின் ஒவ்வொரு கூட்டத்தாரும் சாயங்காலத்தில் அதை அடித்து,

7 அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, தாங்கள் அதைப் புசிக்கும் வீட்டுவாசல் நிலைக்கால்கள் இரண்டிலும் நிலையின் மேற்சட்டத்திலும் தெளித்து,

8 அன்று ராத்திரியிலே அதின் மாம்சத்தை நெருப்பினால் சுட்டு, புளிப்பில்லா அப்பத்தோடும் கசப்பான கீரையோடும் அதைப் புசிக்கக்கடவர்கள்.