3 அப்பொழுது மோசே ஜனங்களை நோக்கி: நீங்கள் அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து புறப்பட்ட இந்த நாளை நினையுங்கள்; கர்த்தர் பலத்த கையினால் உங்களை அவ்விடத்திலிருந்து புறப்படப்பண்ணினார்; ஆகையால், நீங்கள் புளித்த அப்பம் புசிக்கவேண்டாம்.
4 ஆபிப் மாதத்தின் இந்த நாளிலே நீங்கள் புறப்பட்டீர்கள்.
5 ஆகையால், கர்த்தர் உனக்குக் கொடுப்பேன் என்று உன் பிதாக்களுக்கு ஆணையிட்டதும், பாலும் தேனும் ஓடுகிறதுமான தேசமாகிய கானானியர், ஏத்தியர், எமோரியர், ஏவியர், எபூசியர் என்பவர்களுடைய தேசத்துக்கு உன்னை வரப்பண்ணும் காலத்தில், நீ இந்த மாதத்திலே இந்த ஆராதனையைச் செய்வாயாக.
6 புளிப்பில்லா அப்பத்தை ஏழுநாளளவும் புசிக்கக்கடவாய்; ஏழாம்நாளிலே கர்த்தருக்குப் பண்டிகை ஆசரிக்கப்படுவதாக.
7 அந்த ஏழுநாளும் புளிப்பில்லா அப்பம் புசிக்கவேண்டும்; புளிப்புள்ள அப்பம் உன்னிடத்திலே காணப்படவேண்டாம்; உன் எல்லைக்குள் எங்கும் புளித்தமாவும் உன்னிடத்தில் காணப்படவேண்டாம்.
8 அந்நாளில் நீ உன் புத்திரனை நோக்கி: நான் எகிப்திலிருந்து புறப்படுகையில், கர்த்தர் எனக்குச் செய்ததற்காக இப்படி நடப்பிக்கப்படுகிறது என்று சொல்.
9 கர்த்தரின் நியாயப்பிரமாணம் உன் வாயிலிருக்கும்படிக்கு, இது உன் கையிலே ஒரு அடையாளமாகவும் உன் கண்களின் நடுவே நினைப்பூட்டுதலாகவும் இருக்கக்கடவது; பலத்த கையினால் கர்த்தர் உன்னை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்.