யாத்திராகமம் 18:20-26 தமிழ்

20 கட்டளைகளையும் பிரமாணங்களையும் அவர்களுக்கு வெளிப்படுத்தி; அவர்கள் நடக்கவேண்டிய வழியையும், அவர்கள் செய்யவேண்டிய காரியத்தையும் அவர்களுக்குத் தெரியப்படுத்தும்.

21 ஜனங்கள் எல்லாருக்குள்ளும் தேவனுக்குப் பயந்தவர்களும் உண்மையுள்ளவர்களும் பொருளாசையை வெறுக்கிறவர்களுமான திறமையுள்ள மனிதரைத் தெரிந்துகொண்டு, அவர்களை ஆயிரம்பேருக்கு அதிபதிகளாகவும், நூறுபேருக்கு அதிபதிகளாகவும், ஐம்பதுபேருக்கு அதிபதிகளாகவும், பத்துப்பேருக்கு அதிபதிகளாகவும் ஏற்படுத்தும்.

22 அவர்கள் எப்பொழுதும் ஜனங்களை நியாயம் விசாரித்து, பெரிய காரியங்கள் யாவையும் உம்மிடத்தில் கொண்டுவரட்டும், சிறிய காரியங்கள் யாவையும் தாங்களே தீர்க்கட்டும்; இப்படி அவர்கள் உம்மோடேகூட இந்தப் பாரத்தைச் சுமந்தால், உமக்கு இலகுவாயிருக்கும்.

23 இந்தப்பிரகாரம் நீர் செய்வதும், இப்படித் தேவன் உமக்குக் கட்டளையிடுவதும் உண்டானால், உம்மாலே தாங்கக்கூடும்; இந்த ஜனங்கள் எல்லாரும் தாங்கள் போகும் இடத்துக்குச் சுகமாய்ப் போய்ச் சேரலாம் என்றான்.

24 மோசே தன் மாமன் சொல்கேட்டு, அவன் சொன்னபடியெல்லாம் செய்தான்.

25 மோசே இஸ்ரவேலர் எல்லாரிலும் திறமையுள்ள மனிதரைத் தெரிந்துகொண்டு, அவர்களை ஆயிரம்பேருக்கு அதிபதிகளாகவும், நூறுபேருக்கு அதிபதிகளாகவும், ஐம்பதுபேருக்கு அதிபதிகளாகவும், பத்துப்பேருக்கு அதிபதிகளாகவும் ஜனங்கள்மேல் தலைவராக்கினான்.

26 அவர்கள் எப்பொழுதும் ஜனங்களை நியாயம் விசாரித்தார்கள்; வருத்தமான காரியங்களைமாத்திரம் மோசேயினிடத்தில் கொண்டுவந்தார்கள்; சிறிய காரியங்களையெல்லாம் தாங்களே தீர்த்தார்கள்.