18 ஆட்டுக்கடா முழுவதையும் பலிபீடத்தின்மேல் தகித்துவிடுவாயாக; இது கர்த்தருக்குச் செலுத்தும் சர்வாங்கதகனபலி; இது சுகந்த வாசனையும் கர்த்தருக்குச் செலுத்தும் தகனபலியுமாய் இருக்கும்.
19 பின்பு மற்ற ஆட்டுக்கடாவையும் கொண்டுவந்து நிறுத்துவாயாக; அதினுடைய தலையின்மேல் ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளை வைக்கக்கடவர்கள்.
20 அப்பொழுது அந்தக் கடாவை அடித்து, அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, ஆரோனின் வலதுகாது மடலிலும், அவன் குமாரரின் வலதுகாது மடலிலும், அவர்கள் வலதுகையின் பெருவிரலிலும், அவர்கள் வலதுகாலின் பெருவிரலிலும் இட்டு, மற்ற இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்து,
21 பலிபீடத்தின்மேலிருக்கும் இரத்தத்திலும் அபிஷேகதைலத்திலும் கொஞ்சம் எடுத்து, ஆரோனும் அவன் வஸ்திரங்களும் அவனுடைய குமாரரும் அவர்களுடைய வஸ்திரங்களும் பரிசுத்தமாக்கப் படும்படி, அவன்மேலும் அவன் வஸ்திரங்கள்மேலும் அவனுடைய குமாரர்மேலும் அவர்களுடைய வஸ்திரங்கள்மேலும் தெளிப்பாயாக.
22 அந்த ஆட்டுக்கடா பிரதிஷ்டையின் ஆட்டுக்கடாவானதால், அதிலுள்ள கொழுப்பையும் வாலையும் குடல்களை மூடிய கொழுப்பையும் கல்லீரலின்மேலுள்ள சவ்வையும் இரண்டு குண்டிக்காய்களையும் அவைகளின்மேலுள்ள கொழுப்பையும் வலதுபக்கத்து முன்னந்தொடையையும்,
23 கர்த்தருடைய சந்நிதானத்தில் வைத்திருக்கிற புளிப்பில்லா அப்பங்களுள்ள கூடையில் ஒரு அப்பத்தையும் எண்ணெயிட்ட அப்பமாகிய ஒரு அதிரசத்தையும் ஒரு அடையையும் எடுத்து,
24 அவைகள் எல்லாவற்றையும் ஆரோனின் உள்ளங்கைகளிலும் அவன் குமாரரின் உள்ளங்கைகளிலும் வைத்து, அவைகளைக் கர்த்தருடைய சந்நிதானத்தில் அசைவாட்டப்படும் காணிக்கையாக அசைவாட்டி,