யாத்திராகமம் 9:24-30 தமிழ்

24 கல்மழையும் கல்மழையோடே கலந்த அக்கினியும் மிகவும் கொடிதாயிருந்தது; எகிப்து தேசம் குடியேற்றப்பட்ட நாள்முதல் அதில் அப்படி ஒருபோதும் உண்டானதில்லை.

25 எகிப்து தேசம் எங்கும் மனிதரையும் மிருகஜீவன்களையும், வெளியிலே இருந்தவைகள் எவைகளோ அவைகள் எல்லாவற்றையும் அந்தக் கல்மழை அழித்துப்போட்டது; அது வெளியின் பயிர்வகைகளையெல்லாம் அழித்து, வெளியின் மரங்களையெல்லாம் முறித்துப்போட்டது.

26 இஸ்ரவேல் புத்திரர் இருந்த கோசேன் நாட்டிலே மாத்திரம் கல்மழை இல்லாதிருந்தது.

27 அப்பொழுது பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அழைப்பித்து: நான் இந்த முறை பாவம் செய்தேன்; கர்த்தர் நீதியுள்ளவர்; நானும் என் ஜனமும் துன்மார்க்கர்.

28 இது போதும்; இந்த மகா இடிமுழக்கங்களும் கல்மழையும் ஒழியும்படிக்கு, கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணுங்கள்; நான் உங்களைப் போகவிடுவேன், இனி உங்களுக்குத் தடையில்லை என்றான்.

29 மோசே அவனை நோக்கி: நான் பட்டணத்திலிருந்து புறப்பட்டவுடனே, என் கைகளைக் கர்த்தருக்கு நேராக விரிப்பேன்; அப்பொழுது இடிமுழக்கங்கள் ஓய்ந்து கல்மழை நின்றுபோகும்; அதினால் பூமி கர்த்தருடையது என்பதை நீர் அறிவீர்.

30 ஆகிலும் நீரும் உம்முடைய ஊழியக்காரரும் இன்னும் தேவனாகிய கர்த்தருக்குப் பயப்படமாட்டீர்கள் என்பதை அறிவேன் என்றான்.