யோசுவா 22:24-30 தமிழ்

24 நாளைக்கு உங்கள் பிள்ளைகள் எங்கள் பிள்ளைகளை நோக்கி: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கும் உங்களுக்கும் என்ன?

25 ரூபன் புத்திரர் காத் புத்திரர் ஆகிய உங்களுக்கும் எங்களுக்கும் நடுவே கர்த்தர் யோர்தானை எல்லையாக வைத்தார்; கர்த்தரிடத்தில் உங்களுக்குப் பங்கில்லை என்று சொல்லி, எங்கள் பிள்ளைகளைக் கர்த்தருக்குப் பயப்படாதிருக்கச் செய்வார்கள் என்கிற ஐயத்தினாலே நாங்கள் சொல்லிக்கொண்டது என்னவென்றால்:

26 சர்வாங்கதகனத்திற்கு அல்ல, பலிக்கும் அல்ல, எங்கள் சர்வாங்கதகனங்களாலும் பலிகளாலும் சமாதானபலிகளாலும் நாங்கள் கர்த்தரின் சந்நிதியில் அவருடைய ஆராதனையைச் செய்யத்தக்கவர்கள் என்று எங்களுக்கும் உங்களுக்கும், நமக்குப் பின்வரும் நம்முடைய சந்ததியாருக்கும் நடுவே சாட்சி உண்டாயிருக்கும்படிக்கும்,

27 கர்த்தரிடத்தில் உங்களுக்குப் பங்கில்லை என்று உங்கள் பிள்ளைகள் நாளைக்கு எங்கள் பிள்ளைகளோடே சொல்லாதபடிக்குமே, ஒரு பீடத்தை நமக்காக உண்டுபண்ணுவோம் என்றோம்.

28 நாளைக்கு எங்களோடாவது, எங்கள் சந்ததியாரோடாவது அப்படிச் சொல்வார்களானால், அப்பொழுது சர்வாங்க தகனத்திற்கும் அல்ல, பலிக்கும் அல்ல, எங்களுக்கும் உங்களுக்கும் நடுவே சாட்சிக்காக எங்கள் பிதாக்கள் உண்டுபண்ணின கர்த்தருடைய பலிபீடத்தின் சாயலான பீடத்தைப் பாருங்கள் என்று சொல்லலாம் என்றோம்.

29 நம்முடைய தேவனாகிய கர்த்தரின் வாசஸ்தலத்திற்கு முன்பாக இருக்கிற அவருடைய பலிபீடத்தைத்தவிர, நாங்கள் சர்வாங்க தகனத்திற்கும், போஜனபலிக்கும், மற்றப் பலிக்கும் வேறொரு பீடத்தைக் கட்டுகிறதினாலே, கர்த்தருக்கு விரோதமாய்க் கலகம்பண்ணுவதும், இன்று கர்த்தரைப் பின்பற்றாதபடிக்கு விலகுவதும், எங்களுக்குத் தூரமாயிருப்பதாக என்றார்கள்.

30 ரூபன் புத்திரரும் காத் புத்திரரும் மனாசே புத்திரரும் சொல்லுகிற வார்த்தைகளை ஆசாரியனாகிய பினெகாசும், அவனோடே இருந்த சபையின் பிரபுக்களும், இஸ்ரவேலுடைய ஆயிரவரின் தலைவரும் கேட்டபோது, அது அவர்கள் பார்வைக்கு நன்றாயிருந்தது.