7 இதோ, கொடுமை என்று கூப்பிடுகிறேன், கேட்பார் ஒருவரும் இல்லை; கூக்குரலிடுகிறேன், நியாயவிசாரணை இல்லை.
8 நான் கடந்துபோகக்கூடாதபடிக்கு அவர் என் பாதையை வேலியடைத்து, என் வழிகளை இருளாக்கிவிட்டார்.
9 என்னிலிருந்த என் மகிமையை அவர் உரிந்துகொண்டு, என் சிரசின் கிரீடத்தை எடுத்துப்போட்டார்.
10 அவர் என்னை நான்கு புறத்திலும் நாசமாக்கினார், நான் அற்றுப்போகிறேன்; என் நம்பிக்கையை ஒரு செடியைப்போலப் பிடுங்கிப்போட்டார்.
11 அவர் தமது கோபத்தை என்மேல் எரியப்பண்ணினார்; என்னைத் தம்முடைய சத்துருக்களில் ஒருவனாக எண்ணிக்கொள்ளுகிறார்.
12 அவருடைய தண்டுப்படைகள் ஏகமாய் வந்து, எனக்கு விரோதமாய்த் தங்கள் வழியை உயர்த்தி, என் கூடாரத்தைச் சுற்றிப் பாளயமிறங்கினார்கள்.
13 என் சகோதரரை என்னைவிட்டுத் தூரப்படுத்தினார்; எனக்கு அறிமுகமானவர்கள் எனக்கு அந்நியராய்ப் போனார்கள்.