17 எத்தனைச் சடுதியில் துன்மார்க்கரின் விளக்கு அணைந்துபோகும்; அவர் தமது கோபத்தினால் வேதனைகளைப் பகிர்ந்துகொடுக்கையில், அவர்கள் ஆபத்து அவர்கள்மேல் வரும்.
18 அவர்கள் காற்றுமுகத்திலிருக்கிற துரும்பைப்போலவும், பெருங்காற்று பறக்கடிக்கிற பதரைப்போலவும் இருக்கிறார்கள்.
19 தேவன் அவனுடைய அக்கிரமத்தை அவன் பிள்ளைகளுக்கு வைத்து வைக்கிறார்; அவன் உணரத்தக்கவிதமாய் அதை அவனுக்குப் பலிக்கப்பண்ணுகிறார்.
20 அவனுடைய அழிவை அவனுடைய கண்கள் காணும், சர்வவல்லவருடைய உக்கிரத்தைக் குடிப்பான்.
21 அவன் மாதங்களின் தொகை குறுக்கப்படும்போது, அவனுக்குப் பிற்பாடு அவன் வீட்டைப்பற்றி அவனுக்கு இருக்கும் விருப்பமென்ன?
22 உயர்ந்தோரை நியாயந்தீர்க்கிற தேவனுக்கு அறிவை உணர்த்த யாராலாகும்?
23 ஒருவன் நிர்வாகத்தோடும் சுகத்தோடும் வாழ்ந்து குறையற்ற பெலனுள்ளவனாய்ச் சாகிறான்.