யோவேல் 1:3-9 தமிழ்

3 இதின் செய்தியை உங்கள் பிள்ளைகளுக்குத் தெரிவியுங்கள்; இதை உங்கள் பிள்ளைகள் தங்கள் பிள்ளைகளுக்கும், அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கும் சந்ததியாருக்கும் தெரிவிக்கக்கடவர்கள்.

4 பச்சைப்புழு விட்டதை வெட்டுக்கிளி தின்றது; வெட்டுக்கிளி விட்டதைப் பச்சைக்கிளி தின்றது; பச்சைக்கிளி விட்டதை முசுக்கட்டைப்பூச்சி தின்றது.

5 வெறியரே, விழித்து அழுங்கள்; திராட்சரசம் குடிக்கிற சகல ஜனங்களே, புது திராட்சரசத்தினிமித்தம் அலறுங்கள்; அது உங்கள் வாயினின்று விலக்கப்பட்டது.

6 எண்ணிமுடியாத ஒரு பலத்த ஜாதி என் தேசத்தின்மேல் வருகிறது; அதின் பற்கள் சிங்கத்தின் பற்கள்; துஷ்ட சிங்கத்தின் கடைவாய்ப்பற்கள் அதற்கு உண்டு.

7 அது என் திராட்சச்செடியை அழித்து, என் அத்திமரத்தை உரித்து, அதின் பட்டையை முற்றிலும் தின்றுபோட்டது; அதின் கிளைகள் வெண்மையாயிற்று.

8 தன் பாலியவயதின் புருஷனுக்காக இரட்டுடுத்தியிருக்கிற பெண்ணைப்போலப் புலம்பு.

9 போஜனபலியும் பானபலியும் கர்த்தருடைய ஆலயத்தை விட்டு அற்றுப்போயின; கர்த்தரின் ஊழியக்காரராகிய ஆசாரியர்கள் துக்கிக்கிறார்கள்.