யோவேல் 2:18-24 தமிழ்

18 அப்பொழுது கர்த்தர் தமது தேசத்துக்காக வைராக்கியங்கொண்டு, தமது ஜனத்தைக் கடாட்சிப்பார்.

19 கர்த்தர் மறுமொழி கொடுத்து, தமது ஜனத்தை நோக்கி: இதோ, நான் உங்களை இனிப் புறஜாதிகளுக்குள்ளே நிந்தையாக வைக்காமல் உங்களுக்குத் தானியத்தையும் திராட்சரசத்தையும் எண்ணெயையும் கொடுத்தேன், நீங்கள் அதினால் திருப்தியாவீர்கள்.

20 வடதிசைச்சேனையை உங்களுக்குத் தூரமாக விலக்கி, அதின் முன்தண்டு கீழ்க்கடலுக்கும், அதின் பின்தண்டு மேற்கடலுக்கும், நேராக அதை வறட்சியும் பாழுமான தேசத்துக்குத் துரத்திவிடுவேன்; அங்கே அதின் நாற்றம் எழும்பி, அதின் துர்க்கந்தம் வீசும்; அது பெரிய காரியங்களைச் செய்தது.

21 தேசமே, பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்.

22 வெளியின் மிருகங்களே, பயப்படாதேயுங்கள்; வனாந்தரத்திலே மேய்ச்சல்கள் உண்டாகும்; விருட்சங்கள் காய்களைக் காய்க்கும்; அத்திமரமும் திராட்சச்செடியும் பலனைத்தரும்.

23 சீயோன் குமாரரே, உங்கள் தேவனாகிய கர்த்தருக்குள் மகிழ்ந்து களிகூருங்கள்; அவர் தக்கபடி உங்களுக்கு முன்மாரியைக் கொடுத்து, உங்களுக்கு முன்மாரியையும் பின்மாரியையும் ஏற்கனவே வருஷிக்கப்பண்ணுவார்.

24 களங்கள் தானியத்தினால் நிரம்பும்; ஆலைகளில் திராட்சரசமும் எண்ணெயும் வழிந்தோடும்.