45 அந்த வியாதி உண்டாயிருக்கிற குஷ்டரோகி வஸ்திரம் கிழிந்தவனாயும், தன் தலையை மூடாதவனாயும் இருந்து, அவன் தன் தாடியை மூடிக்கொண்டு, "தீட்டு, தீட்டு" என்று சத்தமிடவேண்டும்.
46 அந்த வியாதி அவனில் இருக்கும் நாள்வரைக்கும் தீட்டுள்ளவனாக எண்ணப்படக்கடவன்; அவன் தீட்டுள்ளவனே; ஆகையால், அவன் தனியே குடியிருக்கவேண்டும்; அவன் குடியிருப்பு பாளயத்துக்குப் புறம்பே இருக்கக்கடவது.
47 ஆட்டுமயிர் வஸ்திரத்திலாவது, பஞ்சுநூல் வஸ்திரத்திலாவது,
48 பஞ்சுநூல் அல்லது ஆட்டுமயிரான பாவிலாவது, ஊடையிலாவது, ஒரு தோலிலாவது, தோலினால் செய்த எந்தவித வஸ்துவிலாவது குஷ்டதோஷம் தோன்றி,
49 வஸ்திரத்திலாவது, தோலிலாவது, பாவிலாவது, ஊடையிலாவது, தோலினால் செய்த எந்தவித வஸ்துவிலாவது குஷ்டதோஷம் பச்சையாயாவது சிவப்பாயாவது காணப்பட்டால் அது குஷ்டமாயிருக்கும்; அதை ஆசாரியனுக்குக் காண்பிக்கவேண்டும்.
50 ஆசாரியன் அதைப் பார்த்து, ஏழுநாள் அடைத்துவைத்து,
51 ஏழாம் நாளிலே அதைப் பார்க்கக்கடவன்; வஸ்திரத்திலாவது, பாவிலாவது, ஊடையிலாவது, தோலிலாவது, தோலினால் செய்த எந்தவித வஸ்துவிலாவது அது அதிகப்பட்டிருந்தால், அது அரிக்கிற குஷ்டம்; அது தீட்டாயிருக்கும்.