36 உங்களில் உயிரோடு மீதியாயிருப்பவர்களின் இருதயங்கள் தங்கள் சத்துருக்களின் தேசங்களில் மனத்தளர்ச்சி அடையும்படி செய்வேன்; அசைகிற இலையின் சத்தமும் அவர்களை ஓட்டும்; அவர்கள் பட்டயத்திற்குத் தப்பி ஓடுகிறது போல ஓடி, துரத்துவார் இல்லாமல் விழுவார்கள்.
37 துரத்துவார் இல்லாமல், பட்டயத்துக்கு முன் விழுவதுபோல, ஒருவர்மேல் ஒருவர் இடறிவிழுவார்கள்; உங்கள் சத்துருக்களுக்குமுன் நிற்க உங்களுக்குப் பெலன் இராது.
38 புறஜாதிகளுக்குள்ளே அழிந்துபோவீர்கள்; உங்கள் சத்துருக்களின் தேசம் உங்களைப் பட்சிக்கும்.
39 உங்களில் தப்பினவர்கள் தங்கள் அக்கிரமங்களினிமித்தமும், தங்கள் பிதாக்களின் அக்கிரமங்களினிமித்தமும், உங்கள் சத்துருக்களின் தேசங்களில் வாடிப்போவார்கள்.
40 அவர்கள் எனக்கு விரோதமாகத் துரோகம்பண்ணி நடப்பித்த தங்கள் அக்கிரமத்தையும், தங்கள் பிதாக்களின் அக்கிரமத்தையும் அறிக்கையிடுகிறதுமன்றி,
41 அவர்கள் எனக்கு எதிர்த்து நடந்தபடியினால், நானும் அவர்களுக்கு எதிர்த்து நடந்து, அவர்களுடைய சத்துருக்களின் தேசத்திலே அவர்களைக் கொண்டுபோய் விட்டதையும் அறிக்கையிட்டு, விருத்த சேதனமில்லாத தங்கள் இருதயத்தைத் தாழ்த்தி, தங்கள் அக்கிரமத்துக்குக் கிடைத்த தண்டனையை நியாயம் என்று ஒத்துக்கொண்டால்,
42 நான் யாக்கோபோடே பண்ணின என் உடன்படிக்கையையும், ஈசாக்கோடே பண்ணின என் உடன்படிக்கையையும், ஆபிரகாமோடே பண்ணின என் உடன்படிக்கையையும் நினைப்பேன்; தேசத்தையும் நினைப்பேன்.