லேவியராகமம் 26:40-46 தமிழ்

40 அவர்கள் எனக்கு விரோதமாகத் துரோகம்பண்ணி நடப்பித்த தங்கள் அக்கிரமத்தையும், தங்கள் பிதாக்களின் அக்கிரமத்தையும் அறிக்கையிடுகிறதுமன்றி,

41 அவர்கள் எனக்கு எதிர்த்து நடந்தபடியினால், நானும் அவர்களுக்கு எதிர்த்து நடந்து, அவர்களுடைய சத்துருக்களின் தேசத்திலே அவர்களைக் கொண்டுபோய் விட்டதையும் அறிக்கையிட்டு, விருத்த சேதனமில்லாத தங்கள் இருதயத்தைத் தாழ்த்தி, தங்கள் அக்கிரமத்துக்குக் கிடைத்த தண்டனையை நியாயம் என்று ஒத்துக்கொண்டால்,

42 நான் யாக்கோபோடே பண்ணின என் உடன்படிக்கையையும், ஈசாக்கோடே பண்ணின என் உடன்படிக்கையையும், ஆபிரகாமோடே பண்ணின என் உடன்படிக்கையையும் நினைப்பேன்; தேசத்தையும் நினைப்பேன்.

43 தேசம் அவர்களாலே விடப்பட்டு, பாழாய்க்கிடக்கிறதினாலே தன் ஓய்வுநாட்களை இரம்மியமாய் அநுபவிக்கும்; அவர்கள் என் நியாயங்களை அவமதித்து, அவர்களுடைய ஆத்துமா என் கட்டளைகளை வெறுத்தபடியினால் அடைந்த தங்களுடைய அக்கிரமத்தின் தண்டனையை நியாயம் என்று ஒத்துக்கொள்ளுவார்கள்.

44 அவர்கள் தங்கள் சத்துருக்களின் தேசத்திலிருந்தாலும், நான் அவர்களை நிர்மூலமாக்கத்தக்கதாகவும், நான் அவர்களோடே பண்ணின என் உடன்படிக்கையை அபத்தமாக்கத்தக்கதாகவும், நான் அவர்களைக் கைவிடவும் வெறுக்கவும் மாட்டேன்; நான் அவர்கள் தேவனாகிய கர்த்தர்.

45 அவர்களுடைய தேவனாயிருக்கும்படிக்கு, நான் புறஜாதிகளின் கண்களுக்கு முன்பாக எகிப்துதேசத்திலிருந்து அவர்களைப் புறப்படச்செய்து, அவர்களுடைய முன்னோர்களோடே நான் பண்ணின உடன்படிக்கையை அவர்கள்நிமித்தம் நினைவுகூருவேன்; நான் கர்த்தர் என்று சொல் என்றார்.

46 கர்த்தர் தமக்கும் இஸ்ரவேல் சந்ததியாருக்கும் நடுவே இருக்கும்படி மோசேயைக்கொண்டு, சீனாய்மலையின்மேல் கொடுத்த கட்டளைகளும் நியாயங்களும் இவைகளே.