லேவியராகமம் 5:4-10 தமிழ்

4 மனிதர் பதறி ஆணையிடும் எந்தக்காரியத்திலானாலும், ஒருவன் தீமை செய்கிறதற்காவது நன்மை செய்கிறதற்காவது, தன் மனம் அறியாமல், தன் உதடுகளினால் பதறி ஆணையிட்டு, பின்பு அவன் அதை அறிந்துகொண்டால், அதைக்குறித்துக் குற்றமுள்ளவனாவான்.

5 இப்படிப்பட்டவைகள் ஒன்றில், ஒருவன் குற்றமுள்ளவனாகும்போது, அவன் தான் செய்தது பாவம் என்று அறிக்கையிட்டு,

6 தான் செய்த பாவத்துக்குப் பாவநிவாரணபலியாக, ஆடுகளிலாவது வெள்ளாடுகளிலாவது, ஒரு பெண்குட்டியைக் குற்றநிவாரண பலியாகக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவரவேண்டும்; அதினாலே ஆசாரியன் அவன் செய்த பாவத்தைக்குறித்து அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்.

7 ஆட்டுக்குட்டியைக் கொண்டுவர அவனுக்குச் சக்தியில்லாதிருந்தால், அவன் செய்த குற்றத்தினிமித்தம் இரண்டு காட்டுப்புறாக்களையாவது, இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஒன்றைப் பாவநிவாரண பலியாகவும் மற்றொன்றைச் சர்வாங்க தகனபலியாகவும், கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவரக்கடவன்.

8 அவைகளை ஆசாரியனிடத்தில் கொண்டுவருவானாக; அவன் பாவநிவாரண பலிக்கானதை முன்னே செலுத்தி, அதின் தலையை அதின் கழுத்தினிடத்தில் கிள்ளி, அதை இரண்டாக்காமல் வைத்து,

9 அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, பலிபீடத்தின் பக்கத்தில் தெளித்து, மீதியான இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியிலே வடியவிடுவானாக; இது பாவநிவாரணபலி.

10 மற்றதை நியமத்தின்படியே அவன் தகனபலியாய்ச் செலுத்தக்கடவன்; இவ்விதமாக அவன் செய்த பாவத்தை ஆசாரியன் நிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும்.