உபாகமம் 33:17-23 தமிழ்

17 அவன் அலங்காரம் அவன் தலையீற்றுக் காளையினுடைய அலங்காரத்தைப்போலவும், அவன் கொம்புகள் காண்டாமிருகத்தின் கொம்புகளைப்போலவும் இருக்கும்; அவைகளாலே ஜனங்களை ஏகமாய் தேசத்தின் கடையாந்தரங்கள் மட்டும் முட்டித் துரத்துவான்; அவைகள் எப்பிராயீமின் பதினாயிரங்களும் மனாசேயின் ஆயிரங்களுமானவைகள் என்றான்.

18 செபுலோனைக்குறித்து: செபுலோனே, நீ வெளியே புறப்பட்டுப்போகையிலும், இசக்காரே, நீ உன் கூடாரங்களில் தங்குகையிலும் சந்தோஷமாயிரு.

19 ஜனங்களை அவர்கள் மலையின்மேல் வரவழைத்து, அங்கே நீதியின் பலிகளை இடுவார்கள்; கடல்களிலுள்ள சம்பூரணத்தையும் மணலுக்குள்ளே மறைந்திருக்கும் பொருள்களையும் அநுபவிப்பார்கள் என்றான்.

20 காத்தைக்குறித்து: காத்துக்கு விஸ்தாரமான இடத்தைக் கொடுக்கிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்; அவன் சிங்கத்தைப்போல் தங்கியிருந்து, புயத்தையும் உச்சந்தலையையும் பீறிப்போடுவான்.

21 அவன் தனக்காக முதல் இடத்தைப் பார்த்துக்கொண்டான்; அங்கே தனக்கு நியாயப்பிரமாணிகன் கொடுத்த பங்கு பத்திரமாயிருக்கிறது; ஆனாலும் அவன் ஜனத்தின் முன்னணியாய் வந்து, மற்ற இஸ்ரவேலுடனே கர்த்தரின் நீதியையும் அவருடைய நியாயங்களையும் நடப்பிப்பான் என்றான்.

22 தாணைக்குறித்து: தாண் ஒரு பாலசிங்கம், அவன் பாசானிலிருந்து பாய்வான் என்றான்.

23 நப்தலியைக்குறித்து: நப்தலி கர்த்தருடைய தயவினாலே திருப்தியடைந்து, அவருடைய ஆசீர்வாதத்தினாலே நிறைந்திருப்பான். நீ மேற்றிசையையும் தென்திசையையும் சுதந்தரித்துக்கொள் என்றான்.