11 ஆனாலும் எந்த ஜாதி தன் கழுத்தை பாபிலோன் ராஜாவின் நுகத்துக்குக் கீழ்ப்படுத்தி, அவனைச் சேவிக்குமோ, அந்த ஜாதியைத் தன் தேசத்தைப் பயிரிட்டு, அதிலே குடியிருந்து தாபரிக்கப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
12 இந்த எல்லா வார்த்தைகளின்படியே நான் யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவோடு பேசி: உங்கள் கழுத்தை பாபிலோன் ராஜாவின் நுகத்துக்குக் கீழ்ப்படுத்தி, அவனையும் அவன் ஜனத்தையும் சேவியுங்கள்; அப்பொழுது பிழைப்பீர்கள்.
13 பாபிலோன் ராஜாவைச் சேவியாமற்போகிற ஜாதிக்கு விரோதமாகக் கர்த்தர் சொன்னதின்படியே, நீயும் உன் ஜனமும் பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் கொள்ளைநோயாலும் சாவானேன்?
14 நீங்கள் பாபிலோன் ராஜாவைச் சேவிப்பதில்லையென்று உங்களுடனே சொல்லுகிற தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளைக் கேளாதிருங்கள்; அவர்கள் உங்களுக்குப் பொய்யான தீர்க்கதரிசனம் சொல்லுகிறார்கள்.
15 நான் அவர்களை அனுப்பினதில்லை; நான் உங்களைத் துரத்திவிடுகிறதற்கும், நீங்களும் உங்களுக்குத் தீர்க்கதரிசனம் சொல்லுகிற தீர்க்கதரிசிகளும் அழிந்துபோகிறதற்கும் அல்லவோ இவர்கள் என் நாமத்தைச் சொல்லி, பொய்யான தீர்க்கதரிசனம் உரைக்கிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றேன்.
16 மேலும் நான் ஆசாரியரையும் இந்த எல்லா ஜனங்களையும் நோக்கி: இதோ, கர்த்தருடைய ஆலயத்தின் பணிமுட்டுகள் இப்பொழுது சீக்கிரத்திலே பாபிலோனிலிருந்து திரும்பக்கொண்டுவரப்படுமென்று, உங்களுக்குத் தீர்க்கதரிசனம் சொல்லுகிற உங்களுடைய தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளைக் கேளாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்கள் உங்களுக்குப் பொய்யான தீர்க்கதரிசனம் சொல்லுகிறார்கள்.
17 அவர்களுக்குச் செவிகொடாதிருங்கள்; பாபிலோன் ராஜாவைச் சேவியுங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்; இந்த நகரம் பாழாய்ப்போகவேண்டியதென்ன?