9 தென்றிசை ராஜா அவன் ராஜ்யத்துக்கு விரோதமாக வந்து, தன் தேசத்துக்குத் திரும்பிப்போவான்.
10 ஆனாலும் அவனுடைய குமாரர் யுத்தஞ்செய்ய எத்தனித்து, திரளான சேனைகளைக் கூட்டுவார்கள்; இவர்களில் ஒருவன் நிச்சயமாய் வந்து, வெள்ளம்போலக் கடந்து, திரும்பவும் தன்னுடைய அரண்மட்டும் யுத்தங்கலந்து சேருவான்.
11 அப்பொழுது தென்றிசை ராஜா கடுங்கோபங்கொண்டு புறப்பட்டுப்போய், வடதிசை ராஜாவோடே யுத்தம்பண்ணுவான்; இவன் பெரிய சேனையை ஏகமாய் நிறுத்துவான்; ஆனாலும் இந்தச் சேனை அவன் கையில் ஒப்புக்கொடுக்கப்படும்.
12 அவன் இந்தச் சேனையை நீக்கினபின்பு, அவனுடைய இருதயம் கர்வங்கொள்ளும்; அவன் அநேகமாயிரம்பேரை மடிவிப்பான்; ஆனாலும் பலங்கொள்ளமாட்டான்;
13 சில வருஷங்கள் சென்றபின்பு வடதிசை ராஜா திரும்ப முந்தின சேனையிலும் பெரிதான சேனையைச் சேர்த்து, மகா பெரிய சேனையோடும் வெகு சம்பத்தோடும் நிச்சயமாய் வருவான்.
14 அக்காலங்களில் தென்றிசை ராஜாவுக்கு விரோதமாக அநேகர் எழும்புவார்கள்; அப்பொழுது உன் ஜனத்திலுள்ள துண்டரிக்கக்காரரின் புத்திரர் தரிசனத்தை நிறைவேற்றத் தங்களை உயர்த்துவார்கள்.
15 வடதிசை ராஜா வந்து, கொத்தளம் போட்டு, அரணான நகரங்களைப் பிடிப்பான்; தென்றிசை ராஜாவின் புயபலங்களும் அவன் தெரிந்துகொண்ட ஜனமும் நில்லாமற்போகும்; எதிர்க்கிறதற்குப் பெலன் இராது.