1 கல்தேயருடைய ராஜ்யத்தின்மேல் ராஜாவாக்கப்பட்ட மேதிய குலத்தானாகிய அகாஸ்வேருவின் புத்திரனான தரியு ராஜ்யபாரம்பண்ணுகிற முதலாம் வருஷத்திலே,
2 தானியேலாகிய நான் எருசலேமின் பாழ்க்கடிப்புகள் நிறைவேறித்தீர எழுபதுவருஷம் செல்லுமென்று கர்த்தர் எரேமியா தீர்க்கதரிசியோடே சொல்லிய வருஷங்களின் தொகையைப் புஸ்தகங்களால் அறிந்துகொண்டேன்.
3 நான் உபவாசம்பண்ணி, இரட்டிலும் சாம்பலிலும் உட்கார்ந்து, தேவனாகிய ஆண்டவரை ஜெபத்தினாலும் விண்ணப்பங்களினாலும் தேட என்முகத்தை அவருக்கு நேராக்கி,
4 என் தேவனாகிய கர்த்தரை நோக்கி ஜெபம்பண்ணி, பாவ அறிக்கைசெய்து: ஆ ஆண்டவரே, உம்மில் அன்புகூர்ந்து, உம்முடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு உடன்படிக்கையையும் கிருபையையும் காக்கிற மகத்துவமும் பயங்கரமுமான தேவனே,
5 நாங்கள் பாவஞ்செய்து, அக்கிரமக்காரராயிருந்து, துன்மார்க்கமாய் நடந்து, கலகம்பண்ணி, உம்முடைய கற்பனைகளையும் உம்முடைய நியாயங்களையும் விட்டு அகன்றுபோனோம்.
6 உமது நாமத்தினாலே எங்கள் ராஜாக்களோடும் எங்கள் பிரபுக்களோடும் எங்கள் பிதாக்களோடும் தேசத்தினுடைய சகலஜனங்களோடும் பேசின தீர்க்கதரிசிகளாகிய உம்முடைய ஊழியக்காரருக்குச் செவிகொடாமற்போனோம்.