9 அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, பலிபீடத்தின் பக்கத்தில் தெளித்து, மீதியான இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியிலே வடியவிடுவானாக; இது பாவநிவாரணபலி.
10 மற்றதை நியமத்தின்படியே அவன் தகனபலியாய்ச் செலுத்தக்கடவன்; இவ்விதமாக அவன் செய்த பாவத்தை ஆசாரியன் நிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும்.
11 இரண்டு காட்டுப்புறாக்களையாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது கொண்டுவர அவனுக்குச் சக்தியில்லாதிருந்தால், பாவம் செய்தவன் பாவநிவாரணத்துக்காக ஒரு எப்பா அளவான மெல்லிய மாவிலே பத்தில் ஒரு பங்கைத் தன் காணிக்கையாகக் கொண்டுவருவானாக; அது பாவநிவாரண பலியாயிருப்பதினால், அதின்மேல் எண்ணெய் வார்க்காமலும் தூபவர்க்கம் போடாமலும் இருந்து,
12 அதை ஆசாரியனிடத்தில் கொண்டுவரவேண்டும்; அதிலே ஆசாரியன் ஞாபகக்குறியான பங்காகத் தன் கைப்பிடி நிறைய எடுத்து, கர்த்தருக்கு இடும் தகனபலிகளைப்போல, பலிபீடத்தின் மேல் தகனிக்கக்கடவன்; இது பாவநிவாரணபலி.
13 இவ்விதமாக மேற்சொல்லிய காரியங்கள் ஒன்றில் அவன் செய்த பாவத்துக்காக ஆசாரியன் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும், மீதியானது போஜனபலியைப்போல ஆசாரியனைச் சேரும் என்றார்.
14 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
15 ஒருவன் கர்த்தருக்குரிய பரிசுத்தமானவைகளில் குற்றஞ்செய்து, அறியாமையினால் பாவத்துக்குட்பட்டால், அவன் தன் குற்றத்தினிமித்தம் பரிசுத்த ஸ்தலத்துச் சேக்கல் கணக்கின்படியே, நீ அவன்மேல் சுமத்தும் அபராதம் எவ்வளவோ, அவ்வளவு வெள்ளிச் சேக்கல் பெறும் பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவை குற்றநிவாரணபலியாகக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து,