16 சாலொமோன் ராஜா, அடித்த பொன்தகட்டால் இருநூறு பரிசைகளைச் செய்வித்தான்; ஒவ்வொரு பரிசைக்கு அறுநூறு சேக்கல் நிறைபொன் சென்றது.
17 அடித்த பொன்தகட்டால் முந்நூறு கேடகங்களையும் செய்வித்தான்; ஒவ்வொரு கேடகத்திற்கு மூன்று இராத்தல் பொன் சென்றது; அவைகளை ராஜா லீபனோன் வனம் என்னும் மாளிகையிலே வைத்தான்.
18 ராஜா தந்தத்தினால் பெரிய ஒரு சிங்காசனத்தையும் செய்வித்து, அதைப் பசும்பொன்தகட்டால் மூடினான்.
19 அந்தச் சிங்காசனத்திற்கு ஆறு படிகள் இருந்தது; சிங்காசனத்தின் தலைப்பு பின்னாக வளைவாயிருந்தது; உட்காரும் இடத்திற்கு இருபுறமும் கைச்சாய்மானங்கள் இருந்தது; இரண்டு சிங்கங்கள் கைச்சாய்மானங்கள் அருகே நின்றது.
20 ஆறு படிகளின்மேலும், இரண்டு பக்கத்திலும், பன்னிரண்டு சிங்கங்கள் நின்றது; எந்த ராஜ்யத்திலும் இப்படிப் பண்ணப்படவில்லை.
21 ராஜாவாகிய சாலோமோனுக்கு இருந்த பானபாத்திரங்களெல்லாம் பொன்னும், லீபனோன் வனம் என்கிற மாளிகையின் பணிமுட்டுகளெல்லாம் பசும்பொன்னுமாயிருந்தது; ஒன்றும் வெள்ளியினால் செய்யப்படவில்லை; சாலொமோனின் நாட்களில் வெள்ளி ஒரு பொருளாய் எண்ணப்படவில்லை.
22 ராஜாவுக்குச் சமுத்திரத்திலே ஈராமின் கப்பல்களோடேகூடத் தர்ஷீசின் கப்பல்களும் இருந்தது; தர்ஷீசின் கப்பல்கள் மூன்று வருஷத்துக்கு ஒருதரம் பொன்னையும், வெள்ளியையும், யானைத்தந்தங்களையும், குரங்குகளையும், மயில்களையும் கொண்டுவரும்.