1 இராஜாக்கள் 20:20-26 தமிழ்

20 அவர்கள் அவரவர் தங்களுக்கு எதிர்ப்படுகிறவர்களை வெட்டினார்கள்; சீரியர் முறிந்தோடி போனார்கள்; இஸ்ரவேலர் அவர்களைத் துரத்தினார்கள்; சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத், குதிரையின் மேல் ஏறிச் சில குதிரை வீரரோடுங்கூடத் தப்பியோடிப்போனான்.

21 இஸ்ரவேலின் ராஜா புறப்பட்டு, குதிரைகளையும், இரதங்களையும் முறிய அடித்து, சீரியரில் மகா சங்காரம் உண்டாக வெட்டினான்.

22 பின்பு அந்தத் தீர்க்கதரிசி இஸ்ரவேலின் ராஜாவினிடத்தில் வந்து, அவனை நோக்கி: நீர் போய் உம்மைப் பலப்படுத்திக்கொண்டு, நீர் செய்யத்தக்கது இன்னதென்று கவனித்துப்பாரும்; மறுவருஷத்திலே சீரியாவின் ராஜா உமக்கு விரோதமாக வருவான் என்றான்.

23 சீரியாவின் ராஜாவுடைய ஊழியக்காரர் அவனைப் பார்த்து: அவர்களுடைய தேவர்கள் மலைத்தேவர்கள், அதினால் அவர்கள் நம்மை மேற்கொண்டார்கள்; நாம் அவர்களோடே சமபூமியிலே யுத்தம்பண்ணினால் நல்லது; அப்பொழுது அவர்களை மேற்கொள்வது நிச்சயம்.

24 அதற்காக நீர் செய்யவேண்டியது என்னவென்றால், இந்த ராஜாக்கள் ஒவ்வொருவரையும் தங்கள் ஸ்தலத்திலிருந்து மாற்றி, அவர்களுக்குப் பதிலாகச் சேனாபதிகளை ஏற்படுத்தி;

25 நீர் மடியக்கொடுத்த சேனைக்குச் சரியாய்ச் சேனையையும், அந்தக் குதிரைகளுக்குச் சரியாய்க் குதிரைகளையும், இரதங்களுக்குச் சரியாய் இரதங்களையும் இலக்கம் பார்த்துக்கொள்ளும்; பிற்பாடு சமபூமியிலே நாம் அவர்களோடு யுத்தம்பண்ணி, நிச்சயமாய் அவர்களை மேற்கொள்வோம் என்றார்கள்; அவன் அவர்கள் சொற்கேட்டு அப்படியே செய்தான்.

26 மறுவருஷத்திலே பெனாதாத் சீரியரை இலக்கம்பார்த்து, இஸ்ரவேலோடு யுத்தம்பண்ண ஆப்பெக்குக்கு வந்தான்.