1 சாமுவேல் 12:10-16 தமிழ்

10 ஆகையால் அவர்கள் கர்த்தரை நோக்கி முறையிட்டு: நாங்கள் கர்த்தரை விட்டுப் பாகால்களையும் அஸ்தரோத்தையும் சேவித்ததினாலே, பாவஞ்செய்தோம்; இப்போதும் எங்கள் சத்துருக்களின் கைக்கு எங்களை நீங்கலாக்கி இரட்சியும்; இனி உம்மைச் சேவிப்போம் என்றார்கள்.

11 அப்பொழுது கர்த்தர் எருபாகாலையும், பேதானையும், யெப்தாவையும் சாமுவேலையும் அனுப்பி, நீங்கள் பயமில்லாமல் குடியிருக்கும்படிக்குச் சுற்றிலும் இருந்த உங்கள் சத்துருக்களின் கைக்கும் உங்களை நீங்கலாக்கி இரட்சித்தார்.

12 அம்மோன் புத்திரரின் ராஜாவாகிய நாகாஸ் உங்களுக்கு விரோதமாய் வருகிறதை நீங்கள் கண்டபோது, உங்கள் தேவனாகிய கர்த்தரே உங்களுக்கு ராஜாவாயிருந்தும், நீங்கள் என்னை நோக்கி: அப்படியல்ல, ஒரு ராஜா எங்கள்மேல் ஆளவேண்டும் என்றீர்கள்.

13 இப்பொழுதும் நீங்கள் வேண்டும் என்று விரும்பித் தெரிந்துகொண்ட ராஜா, இதோ, இருக்கிறார்; இதோ, கர்த்தர் உங்களுக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்தினார்.

14 நீங்கள் கர்த்தருடைய வாக்குக்கு விரோதமாய்க் கலகம்பண்ணாமல் கர்த்தருக்குப் பயந்து, அவரைச் சேவித்து, அவருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிந்தால், நீங்களும் உங்களை ஆளுகிற ராஜாவும் உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பின்பற்றுகிறவர்களாயிருப்பீர்கள்.

15 நீங்கள் கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படியாமல், கர்த்தருடைய வாக்குக்கு விரோதமாய்க் கலகம் பண்ணினீர்களானால், கர்த்தருடைய கை உங்கள் பிதாக்களுக்கு விரோதமாயிருந்ததுபோல உங்களுக்கும் விரோதமாயிருக்கும்.

16 இப்பொழுது கர்த்தர் உங்கள் கண்களுக்கு முன்பாகச் செய்யும் பெரிய காரியத்தை நின்று பாருங்கள்.