1 நாளாகமம் 21:12-18 தமிழ்

12 மூன்று வருஷத்துப் பஞ்சமோ? அல்லது உன் பகைஞரின் பட்டயம் உன்னைப் பின்தொடர நீ உன் சத்துருக்களுக்கு முன்பாக முறிந்தோடிப்போகச் செய்யும் மூன்றுமாதச் சங்காரமோ? அல்லது மூன்றுநாள் கர்த்தருடைய தூதன் இஸ்ரவேலுடைய எல்லையெங்கும் சங்காரம் உண்டாகும்படி தேசத்தில் நிற்கும் கர்த்தருடைய பட்டயமாகிய கொள்ளை நோயோ? இவைகளில் ஒன்றைத் தெரிந்துகொள் என்று கர்த்தர் உரைக்கிறார். இப்போதும் என்னை அனுப்பினவருக்கு நான் என்ன மறுஉத்தரவு கொண்டுபோகவேண்டும் என்பதை யோசித்துப்பாரும் என்றான்.

13 அப்பொழுது தாவீது காத்தை நோக்கி: கொடிய இடுக்கணில் அகப்பட்டிருக்கிறேன்; இப்போது நான் கர்த்தருடைய கையிலே விழுவேனாக; அவருடைய இரக்கங்கள் மகா பெரியது; மனுஷர் கையிலே விழாதிருப்பேனாக என்றான்.

14 ஆகையால் கர்த்தர் இஸ்ரவேலிலே கொள்ளை நோயை வரப்பண்ணினார்; அதினால் இஸ்ரவேலில் எழுபதினாயிரம்பேர் மடிந்தார்கள்.

15 எருசலேமையும் அழிக்க தேவன் ஒரு தூதனை அனுப்பினார்; ஆனாலும் அவன் அழிக்கையில் கர்த்தர் பார்த்து, அந்தத் தீங்குக்கு மனஸ்தாபப்பட்டு, சங்கரிக்கிற தூதனை நோக்கி: போதும்; இப்போது உன் கையை நிறுத்து என்றார்; கர்த்தருடைய தூதன் எபூசியனாகிய ஒர்னானின் களத்தண்டையிலே நின்றான்.

16 தாவீது தன் கண்களை ஏறெடுத்து, பூமிக்கும் வானத்திற்கும் நடுவே நிற்கிற கர்த்தருடைய தூதன் உருவின பட்டயத்தைத் தன் கையில் பிடித்து, அதை எருசலேமின்மேல் நீட்டியிருக்கக் கண்டான்; அப்பொழுது தாவீதும் மூப்பர்களும் இரட்டுப் போர்த்துக்கொண்டு முகங்குப்புற விழுந்தார்கள்.

17 தாவீது தேவனை நோக்கி: ஜனத்தை எண்ணச்சொன்னவன் நான் அல்லவோ? நான்தான் பாவஞ்செய்தேன்; பொல்லாப்பு நடப்பித்தேன்; இந்த ஆடுகள் என்ன செய்தது? என் தேவனாகிய கர்த்தாவே, வாதிக்கும்படி உம்முடைய கரம் உம்முடைய ஜனத்திற்கு விரோதமாயிராமல், எனக்கும் என் தகப்பன் வீட்டிற்கும் விரோதமாயிருப்பதாக என்றான்.

18 அப்பொழுது எபூசியனாகிய ஒர்னானின் களத்திலே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தை உண்டாக்கும்படி, தாவீது அங்கே போகவேண்டுமென்று தாவீதுக்குச் சொல் என்று கர்த்தருடைய தூதன் காத்துக்குக் கட்டளையிட்டான்.