24 மோசேயின் குமாரனாகிய கெர்சோமின் சந்ததியான செபுவேல் பொக்கிஷப் பிரதானியாயிருந்தான்.
25 எலியேசர் மூலமாய் அவனுக்கு இருந்த சகோதரரானவர்கள், இவன் குமாரன் ரெகபியாவும், இவன் குமாரன் எஷாயாவும், இவன் குமாரன் யோராமும், இவன் குமாரன் சிக்கிரியும், இவன் குமாரன் செலோமித்துமே.
26 ராஜாவாகிய தாவீதும், ஆயிரம்பேருக்கு அதிபதிகளும், நூறுபேருக்கு அதிபதிகளுமான பிதாக்களின் தலைவரும், சேனாபதிகளும் யுத்தத்தில் அகப்பட்ட கொள்ளைகளில் எடுத்து,
27 கர்த்தருடைய ஆலயத்தைப் பரிபாலிக்கும்படிக்குப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்ட பொருள்களின் பொக்கிஷங்களையெல்லாம் அந்தச் செலோமித்தும் அவனுடைய சகோதரரும் விசாரித்தார்கள்.
28 ஞானதிருஷ்டிக்காரனாகிய சாமுவேலும், கீசின் குமாரனாகிய சவுலும், நேரின் குமாரனாகிய அப்னேரும், செருயாவின் குமாரனாகிய யோவாபும், அவரவர் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்ட அனைத்தும் செலோமித்தின் கையின்கீழும் அவன் சகோதரர் கையின்கீழும் இருந்தது.
29 இத்சாகாரியரில் கெனானியாவும் அவன் குமாரரும் தேசகாரியங்களைப் பார்க்கும்படி வைக்கப்பட்டு, இஸ்ரவேலின்மேல் விசாரிப்புக்காரரும் மணியக்காரருமாயிருந்தார்கள்.
30 எப்ரோனியரில் அசபியாவும் அவன் சகோதரருமாகிய ஆயிரத்து எழுநூறு பராக்கிரமசாலிகள் யோர்தானுக்கு இப்பாலே மேற்கே இருக்கிற இஸ்ரவேலின்மேல் கர்த்தருடைய எல்லா ஊழியத்திற்கும் ராஜாவின் வேலைக்கும் வைக்கப்பட்டார்கள்.