2 இராஜாக்கள் 11:10-16 தமிழ்

10 ஆசாரியன் கர்த்தரின் ஆலயத்தில் தாவீது ராஜா வைத்திருந்த ஈட்டிகளையும் கேடகங்களையும் நூறுபேருக்கு அதிபதிகளிடத்தில் கொடுத்தான்.

11 காவலாளர் அவரவர் தங்கள் ஆயுதங்களைப் பிடித்தவர்களாய், ஆலயத்தின் வலதுபக்கம் தொடங்கி அதின் இடது பக்கமட்டும், பலிபீடத்திற்கு எதிராகவும் ஆலயத்திற்கு எதிராகவும் ராஜாவைச் சுற்றிலும் நின்றார்கள்.

12 அப்பொழுது அவன்: ராஜகுமாரனை வெளியே கொண்டுவந்து, கிரீடத்தை அவன்மேல் வைத்து, சாட்சியின் ஆகமத்தை அவன் கையிலே கொடுத்தான்; இப்படி அவனை ராஜாவாக்கி அபிஷேகம் பண்ணி: ராஜா வாழ்க என்று சொல்லி கைகொட்டினார்கள்.

13 ஓடிவருகிற ஜனங்கள் செய்த ஆரவாரத்தை அத்தாலியாள் கேட்டபோது: அவள் கர்த்தருடைய ஆலயத்திற்கு ஜனங்களிடத்தில் வந்து,

14 இதோ, ராஜா முறைமையின்படியே தூணண்டையிலே நிற்கிறதையும், ராஜாவண்டையில் நிற்கிற பிரபுக்களையும், எக்காளம் ஊதுகிறவர்களையும், தேசத்து ஜனங்கள் எல்லாரும் சந்தோஷப்பட்டு எக்காளம் ஊதுகிறதையும் கண்டவுடனே, அத்தாலியாள் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு: துரோகம் துரோகம் என்று கூவினாள்.

15 ஆசாரியனாகிய யோய்தா இராணுவத்தலைவராகிய நூறு பேருக்கு அதிபதிகளானவர்களுக்குக் கட்டளையிட்டு: இவளை வரிசைகளுக்குப் புறம்பே கொண்டுபோங்கள்; இவளைப் பின்பற்றுகிறவனைப் பட்டயத்தாலே வெட்டிப்போடுங்கள் என்றான். கர்த்தருடைய ஆலயத்தில் அவளைக் கொல்லலாகாது என்று ஆசாரியன் சொல்லியிருந்தான்.

16 அவர்கள் அவளுக்கு இடம் உண்டாக்கினபோது, ராஜாவின் அரமனைக்குள் குதிரைகள் பிரவேசிக்கிற வழியிலே அவள் போகையில், அவளைக் கொன்று போட்டார்கள்.