1 எலிசா தான் உயிர்ப்பித்த பிள்ளையின் தாயாகிய ஸ்திரீயை நோக்கி: நீ உன் வீட்டாரோடுங்கூட எழுந்து புறப்பட்டுப்போய் எங்கேயாகிலும் சஞ்சரி; கர்த்தர் பஞ்சத்தை வருவிப்பார்; அது ஏழு வருஷம் தேசத்தில் இருக்கும் என்று சொல்லியிருந்தான்.
2 அந்த ஸ்திரீ எழுந்து, தேவனுடைய மனுஷன் சொன்ன வார்த்தையின்படி செய்து, தன் வீட்டாரோடுங்கூடப் புறப்பட்டு, பெலிஸ்தரின் தேசத்தில்போய், ஏழுவருஷம் சஞ்சரித்தாள்.
3 ஏழுவருஷம் சென்றபின்பு, அவள் பெலிஸ்தரின் தேசத்தை விட்டுத் திரும்பவந்து, தன் வீட்டுக்காகவும் தன் வயலுக்காகவும் ராஜாவினிடத்தில் முறையிடும்படி போனாள்.
4 அந்நேரத்தில் ராஜா, தேவனுடைய மனுஷனின் வேலைக்காரனாயிருந்த கேயாசியுடனே பேசி: எலிசா செய்த அதிசயங்களையெல்லாம் நீ எனக்கு விவரமாய்ச் சொல் என்றான்.
5 செத்துப்போனவனை உயிர்ப்பித்தார் என்பதை அவன் ராஜாவுக்கு அறிவிக்கிறபோது, இதோ, அவன் உயிர்ப்பித்த பிள்ளையின் தாயாகிய அந்த ஸ்திரீ வந்து, தன் வீட்டுக்காகவும் தன் வயலுக்காகவும் ராஜாவினிடத்தில் முறையிட்டாள்; அப்பொழுது கேயாசி: ராஜாவாகிய என் ஆண்டவனே, இவள்தான் அந்த ஸ்திரீ; எலிசா உயிர்ப்பித்த இவளுடைய குமாரன் இவன்தான் என்றான்.
6 ராஜா அந்த ஸ்திரீயைக் கேட்டதற்கு, அவள்: அதை அவனுக்கு விவரித்துச் சொன்னாள்; அப்பொழுது ராஜா அவளுக்கு ஒரு பிரதானியை நியமித்து, அவளுக்கு உண்டானது எல்லாவற்றையும், அவள் தேசத்தை விட்டுப்போன நாள்முதல் இதுவரைக்கும் உண்டான அந்த வயலின் வருமானம் அனைத்தையும் அவளுக்குக் கிடைக்கும்படி செய் என்றான்.
7 சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத் வியாதியாயிருந்தான்; எலிசா தமஸ்குவுக்கு வந்தான்; தேவனுடைய மனுஷன் இவ்விடத்தில் வந்திருக்கிறான் என்று அவனுக்கு அறிவிக்கப்பட்டபோது,
8 ராஜா ஆசகேலை நோக்கி: நீ உன் கையிலே ஒரு காணிக்கையை எடுத்துக்கொண்டு, தேவனுடைய மனுஷனுக்கு எதிர்கொண்டுபோய், நான் இந்த வியாதி நீங்கிப் பிழைப்பேனா என்று அவனைக் கொண்டு கர்த்தரிடத்தில் விசாரிக்கச் சொன்னான்.
9 ஆசகேல் தமஸ்குவின் சகல உச்சிதங்களிலும் நாற்பது ஒட்டகங்களின் சுமையான காணிக்கையை எடுத்துக்கொண்டு, அவனுக்கு எதிர்கொண்டுபோய், அவனுக்கு முன்பாக நின்று, சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத் என்னும் உம்முடைய குமாரன் என்னை உம்மிடத்தில் அனுப்பி, இந்த வியாதி நீங்கிப் பிழைப்பேனா என்று கேட்கச்சொன்னார் என்றான்.
10 எலிசா அவனை நோக்கி: நீ போய், வியாதி நீங்கிப் பிழைப்பீர் என்று அவனுக்குச் சொல்லு; ஆனாலும் அவன் சாகவே சாவான் என்பதைக் கர்த்தர் எனக்குக் காண்பித்தார் என்றான்.
11 பின்பு தேவனுடைய மனுஷன்: தன் முகத்தைத் திருப்பாமல் அவன் சலித்துப்போகுமட்டும் அவனை நோக்கிக்கொண்டே அழுதான்.
12 அப்பொழுது ஆசகேல்: என் ஆண்டவன் அழுகிறது என்ன என்று கேட்டான். அதற்கு அவன்: நீ இஸ்ரவேல் புத்திரருக்குச் செய்யும் தீங்கை நான் அறிந்திருக்கிறபடியினால் அழுகிறேன்; நீ அவர்கள் கோட்டைகளை அக்கினிக்கு இரையாக்கி, அவர்கள் வாலிபரைப் பட்டயத்தால் கொன்று, அவர்கள் குழந்தைகளைத் தரையோடே மோதி, அவர்கள் கர்ப்பவதிகளைக் கீறிப்போடுவாய் என்றான்.
13 அப்பொழுது ஆசகேல், இத்தனை பெரிய காரியத்தைச் செய்ய நாயாகிய உமது அடியான் எம்மாத்திரம் என்றான். அதற்கு எலிசா: நீ சீரியாவின்மேல் ராஜாவாவாய் என்பதைக் கர்த்தர் எனக்குத் தெரிவித்தார் என்றான்.
14 இவன் எலிசாவைவிட்டுப் புறப்பட்டு, தன் ஆண்டவனிடத்தில் வந்தபோது, அவன்: எலிசா உனக்கு என்ன சொன்னான் என்று கேட்டதற்கு; இவன், நீர் வியாதி நீங்கிப் பிழைப்பீர் என்று எனக்குச் சொன்னான் என்று சொல்லி,
15 மறுநாளிலே ஒரு சமுக்காளத்தை எடுத்து, தண்ணீரிலே தோய்த்து அவன் முகத்தின்மேல் விரித்தான்; அதினால் அவன் செத்துப்போனான்; ஆசகேல் அவனுக்குப் பதிலாய் ராஜாவானான்.
16 இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபின் குமாரன் யோராமுடைய ஐந்தாம் வருஷத்தில், யோசபாத் யூதாவிலே இன்னும் ராஜாவாயிருக்கையில், யோசபாத்தின் குமாரனாகிய யோராம் என்னும் யூதாவின் ராஜா ராஜ்யபாரம்பண்ணத் துவக்கினான்.
17 அவன் ராஜாவாகிறபோது முப்பத்திரண்டு வயதாயிருந்து, எட்டு வருஷம் எருசலேமில் ராஜ்யபாரம் பண்ணினான்.
18 அவன் இஸ்ரவேல் ராஜாக்களின் வழியிலே நடந்து, ஆகாபின் வீட்டார் செய்ததுபோலச் செய்தான்; ஆகாபின் குமாரத்தி அவனுக்கு மனைவியாயிருந்தாள்; அவன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.
19 கர்த்தர்: உன் குமாரருக்குள்ளே எந்நாளும் ஒரு விளக்கை உனக்குக் கட்டளையிடுவேன் என்று தம்முடைய தாசனாகிய தாவீதுக்குச் சொன்னதின்படியே, அவனிமித்தம் அவர் யூதாவை முற்றிலும் கெடுக்கவில்லை.
20 அவன் நாட்களில் யூதாவுடைய கையின்கீழிருந்த ஏதோமியர் கலகம்பண்ணி, தங்களுக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்திக்கொண்டார்கள்.
21 அதினாலே யோராம் சகல இரதங்களோடுங்கூடச் சாயீருக்குப் புறப்பட்டுப் போனான்; அவன் இராத்திரியில் எழுந்திருந்து, தன்னை வளைந்துகொண்ட ஏதோமியரையும் இரதங்களின் தலைவரையும் முறிய அடித்தபோது, ஜனங்கள் தங்கள் கூடாரங்களுக்கு ஓடிப்போனார்கள்.
22 அப்படியே யூதாவுடைய கையின் கீழிருந்த ஏதோமியர், இந்நாள்வரைக்கும் இருக்கிறதுபோல, கலகம் பண்ணினார்கள்; அக்காலத்தில்தானே லிப்னா பட்டணத்தாரும் கலகம்பண்ணினார்கள்.
23 யோராமின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
24 யோராம் தன் பிதாக்களோடே நித்திரையடைந்து, தன் பிதாக்களிடத்திலே தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணப்பட்டான்; அவனுக்குப் பதிலாக அவன் குமாரனாகிய அகசியா ராஜாவானான்.
25 இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபின் குமாரன் யோராமுடைய பன்னிரண்டாம் வருஷத்திலே, யூதாவின் ராஜாவாகிய யோராமின் குமாரன் அகசியா ராஜாவானான்.
26 அகசியா ராஜாவாகிறபோது, இருபத்திரண்டு வயதாயிருந்து, ஒரே வருஷம் எருசலேமில் ராஜ்யபாரம் பண்ணினான்; இஸ்ரவேலின் ராஜாவாகிய ஒம்ரியின் குமாரத்தியான அவன் தாயின் பேர் அத்தாலியாள்.
27 அவன் ஆகாபுடைய வீட்டாரின் வழியே நடந்து, ஆகாபின் வீட்டாரைப்போல் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; அவன் ஆகாப் வீட்டாரோடே சம்பந்தங்கலந்திருந்தான்.
28 அவன் ஆகாபின் குமாரனாகிய யோராமோடேகூடக் கீலேயாத்திலுள்ள ராமோத்திற்குச் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலோடு யுத்தம்பண்ணப்போனான்; சீரியர் யோராமைக் காயப்படுத்தினார்கள்.
29 ராஜாவாகிய யோராம் தான் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலோடு யுத்தம்பண்ணுகையில், சீரியர் ராமாவிலே தன்னை வெட்டின காயங்களை ஆற்றிக்கொள்ள யெஸ்ரயேலுக்குப் போயிருந்தான்; ஆகாபின் குமாரனாகிய யோராம் வியாதியாயிருந்தபடியினால், யூதாவின் ராஜாவாகிய யோராமின் குமாரன் அகசியா யெஸ்ரயேலில் இருக்கிற அவனைப் பார்க்கிறதற்குப் போனான்.