13 கர்த்தருடைய ஆலயத்துக்குக் கொண்டுவரப்பட்ட பணத்தினாலே வெள்ளிக்கிண்ணங்களும், கீதவாத்தியங்களும், கலங்களும், எக்காளங்களும், பொற்பாத்திரங்களும், வெள்ளிப் பாத்திரங்களும் பண்ணப்படாமல்,
14 கர்த்தருடைய ஆலயத்தைப் பழுது பார்க்கும்படிக்கு வேலை செய்கிறவர்களுக்கே அதைக் கொடுத்தார்கள்.
15 வேலைசெய்கிறவர்களுக்குக் கொடுக்கும்படிக்கு, பணத்தை வரப்பற்றிக்கொண்ட மனுஷர் கையிலே கணக்குக் கேளாதிருந்தார்கள்; அவர்கள் உண்மையாய் அதை நடப்பித்தார்கள்.
16 குற்றப்பிராயசித்தப் பணமும் பாவபிராயசித்தப் பணமும் கர்த்தருடைய ஆலயத்திற்காகக் கொண்டுவரப்படவில்லை; அது ஆசாரியரைச் சேர்ந்தது.
17 அதற்குப் பின்பு சீரியாவின் ராஜாவாகிய ஆசகேல் வந்து, காத்தூரின்மேல் யுத்தம்பண்ணி அதைப் பிடித்தான்; அதின் பின்பு எருசலேமுக்கு விரோதமாய்ப் போக ஆசகேல் தன் முகத்தைத் திருப்பினான்.
18 அப்பொழுது யூதாவின் ராஜாவாகிய யோவாஸ், தன் பிதாக்களாகிய யோசபாத் யோராம் அகசியா என்னும் யூதாவின் ராஜாக்கள் பரிசுத்தம்பண்ணிவைத்த எல்லாவற்றையும், தான் பரிசுத்தம் பண்ணிவைத்ததையும், கர்த்தருடைய ஆலயத்திலும் ராஜாவின் அரமனையிலுமுள்ள பொக்கிஷங்களில் அகப்பட்ட பொன் யாவையும் எடுத்து சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலுக்கு அனுப்பினான்; அப்பொழுது அவன் எருசலேமை விட்டுத் திரும்பிப்போனான்.
19 யோவாசின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும் யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.