2 இராஜாக்கள் 6:12-18 தமிழ்

12 அப்பொழுது அவன் ஊழியக்காரரில் ஒருவன்: அப்படியில்லை; என் ஆண்டவனாகிய ராஜாவே, நீர் உம்முடைய பள்ளி அறையிலே பேசுகிற வார்த்தைகளையும் இஸ்ரவேலிலிருக்கிற தீர்க்கதரிசியாகிய எலிசா இஸ்ரவேலின் ராஜாவுக்கு அறிவிப்பான் என்றான்.

13 அப்பொழுது அவன்: நான் மனுஷரை அனுப்பி அவனைப் பிடிக்கும்படி, நீங்கள் போய் அவன் எங்கே இருக்கிறான் என்று பாருங்கள் என்றான்; அவன் தோத்தானில் இருக்கிறான் என்று அவனுக்கு அறிவிக்கப்பட்டது.

14 அப்பொழுது அவன் அங்கே குதிரைகளையும் இரதங்களையும் பலத்த இராணுவத்தையும் அனுப்பினான்; அவர்கள் இராக்காலத்திலே வந்து பட்டணத்தை வளைந்துகொண்டார்கள்.

15 தேவனுடைய மனுஷனின் வேலைக்காரன் அதிகாலமே எழுந்து வெளியே புறப்படுகையில், இதோ, இராணுவமும் குதிரைகளும் இரதங்களும் பட்டணத்தைச் சுற்றிக்கொண்டிருக்கக் கண்டான்; அப்பொழுது வேலைக்காரன் அவனை நோக்கி: ஐயோ, என் ஆண்டவனே, என்னசெய்வோம் என்றான்.

16 அதற்கு அவன்: பயப்படாதே; அவர்களோடிருக்கிறவர்களைப்பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம் என்றான்.

17 அப்பொழுது எலிசா விண்ணப்பம்பண்ணி: கர்த்தாவே, இவன் பார்க்கும்படி இவன் கண்களைத் திறந்தருளும் என்றான்; உடனே கர்த்தர் அந்த வேலைக்காரன் கண்களைத் திறந்தார்; இதோ, எலிசாவைச்சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும் இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை அவன் கண்டான்.

18 அவர்கள் அவனிடத்தில் வருகையில், எலிசா கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி: இந்த ஜனங்களுக்குக் கண்மயக்கம் உண்டாகும்படி செய்யும் என்றான்; எலிசாவுடைய வார்த்தையின்படியே அவர்களுக்குக் கண்மயக்கம் உண்டாகும்படி செய்தார்.