2 இராஜாக்கள் 6:17-23 தமிழ்

17 அப்பொழுது எலிசா விண்ணப்பம்பண்ணி: கர்த்தாவே, இவன் பார்க்கும்படி இவன் கண்களைத் திறந்தருளும் என்றான்; உடனே கர்த்தர் அந்த வேலைக்காரன் கண்களைத் திறந்தார்; இதோ, எலிசாவைச்சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும் இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை அவன் கண்டான்.

18 அவர்கள் அவனிடத்தில் வருகையில், எலிசா கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி: இந்த ஜனங்களுக்குக் கண்மயக்கம் உண்டாகும்படி செய்யும் என்றான்; எலிசாவுடைய வார்த்தையின்படியே அவர்களுக்குக் கண்மயக்கம் உண்டாகும்படி செய்தார்.

19 அப்பொழுது எலிசா அவர்களை நோக்கி: இது வழி அல்ல; இது பட்டணமும் அல்ல; என் பிறகே வாருங்கள்; நீங்கள் தேடுகிற மனுஷனிடத்தில் நான் உங்களை வழிநடத்துவேன் என்று சொல்லி, அவர்களைச் சமாரியாவுக்கு அழைத்துக் கொண்டுபோனான்.

20 அவர்கள் சமாரியாவில் வந்தபோது, எலிசா: கர்த்தாவே, இவர்கள் பார்க்கும்படிக்கு இவர்கள் கண்களைத் திறந்தருளும் என்றான்; பார்க்கும்படிக்குக் கர்த்தர் அவர்கள் கண்களைத் திறக்கும்போது, இதோ, இவர்கள் சமாரியாவின் நடுவே இருந்தார்கள்.

21 இஸ்ரவேலின் ராஜா அவர்களைக் கண்டபோது, எலிசாவைப் பார்த்து: என் தகப்பனே, நான் அவர்களை வெட்டிப்போடலாமா என்று கேட்டான்.

22 அதற்கு அவன்: நீர் வெட்டவேண்டாம்; நீர் உம்முடைய பட்டயத்தாலும், உம்முடைய வில்லினாலும் சிறையாக்கிக்கொண்டவர்களை வெட்டுகிறீரோ? இவர்கள் புசித்துக் குடித்து, தங்கள் ஆண்டவனிடத்துக்குப் போகும்படிக்கு, அப்பமும் தண்ணீரும் அவர்களுக்கெதிரில் வையும் என்றான்.

23 அப்பொழுது அவர்களுக்குப் பெரிய விருந்துபண்ணி, அவர்கள் புசித்துக்குடித்தபின்பு, அவர்களை அனுப்பிவிட்டான்; அவர்கள் தங்கள் ஆண்டவனிடத்துக்குப் போய்விட்டார்கள்; சீரியரின் தண்டுகள் இஸ்ரவேல் தேசத்திலே அப்புறம் வரவில்லை.