2 இராஜாக்கள் 8:9-15 தமிழ்

9 ஆசகேல் தமஸ்குவின் சகல உச்சிதங்களிலும் நாற்பது ஒட்டகங்களின் சுமையான காணிக்கையை எடுத்துக்கொண்டு, அவனுக்கு எதிர்கொண்டுபோய், அவனுக்கு முன்பாக நின்று, சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத் என்னும் உம்முடைய குமாரன் என்னை உம்மிடத்தில் அனுப்பி, இந்த வியாதி நீங்கிப் பிழைப்பேனா என்று கேட்கச்சொன்னார் என்றான்.

10 எலிசா அவனை நோக்கி: நீ போய், வியாதி நீங்கிப் பிழைப்பீர் என்று அவனுக்குச் சொல்லு; ஆனாலும் அவன் சாகவே சாவான் என்பதைக் கர்த்தர் எனக்குக் காண்பித்தார் என்றான்.

11 பின்பு தேவனுடைய மனுஷன்: தன் முகத்தைத் திருப்பாமல் அவன் சலித்துப்போகுமட்டும் அவனை நோக்கிக்கொண்டே அழுதான்.

12 அப்பொழுது ஆசகேல்: என் ஆண்டவன் அழுகிறது என்ன என்று கேட்டான். அதற்கு அவன்: நீ இஸ்ரவேல் புத்திரருக்குச் செய்யும் தீங்கை நான் அறிந்திருக்கிறபடியினால் அழுகிறேன்; நீ அவர்கள் கோட்டைகளை அக்கினிக்கு இரையாக்கி, அவர்கள் வாலிபரைப் பட்டயத்தால் கொன்று, அவர்கள் குழந்தைகளைத் தரையோடே மோதி, அவர்கள் கர்ப்பவதிகளைக் கீறிப்போடுவாய் என்றான்.

13 அப்பொழுது ஆசகேல், இத்தனை பெரிய காரியத்தைச் செய்ய நாயாகிய உமது அடியான் எம்மாத்திரம் என்றான். அதற்கு எலிசா: நீ சீரியாவின்மேல் ராஜாவாவாய் என்பதைக் கர்த்தர் எனக்குத் தெரிவித்தார் என்றான்.

14 இவன் எலிசாவைவிட்டுப் புறப்பட்டு, தன் ஆண்டவனிடத்தில் வந்தபோது, அவன்: எலிசா உனக்கு என்ன சொன்னான் என்று கேட்டதற்கு; இவன், நீர் வியாதி நீங்கிப் பிழைப்பீர் என்று எனக்குச் சொன்னான் என்று சொல்லி,

15 மறுநாளிலே ஒரு சமுக்காளத்தை எடுத்து, தண்ணீரிலே தோய்த்து அவன் முகத்தின்மேல் விரித்தான்; அதினால் அவன் செத்துப்போனான்; ஆசகேல் அவனுக்குப் பதிலாய் ராஜாவானான்.