2 இராஜாக்கள் 9:23-29 தமிழ்

23 அப்பொழுது யோராம் தன் இரதத்தைத் திருப்பிக்கொண்டு ஓடிப்போய், அகசியாவை நோக்கி: அகசியாவே, இது சதி என்றான்.

24 யெகூ தன் கையால் வில்லை நாணேற்றி, அம்பு யோராமுடைய நெஞ்சில் உருவிப் புறப்படத்தக்கதாய், அவனை அவன் புயங்களின் நடுவே எய்தான்; அதினால் அவன் தன் இரதத்திலே சுருண்டு விழுந்தான்.

25 அப்பொழுது யெகூ, தன் சேனாபதியாகிய பித்காரை நோக்கி: அவனை எடுத்து, யெஸ்ரயேலியனாகிய நாபோத்தின் வயல்நிலத்தில் எறிந்துபோடு; நானும் நீயும் ஒரு சோடாய் அவன் தகப்பனாகிய ஆகாபின் பிறகே குதிரை ஏறிவருகிறபோது, கர்த்தர் இந்த ஆக்கினையை அவன்மேல் சுமத்தினார் என்பதை நினைத்துக்கொள்.

26 நேற்று நாபோத்தின் இரத்தத்தையும், அவன் குமாரரின் இரத்தத்தையும் கண்டேன் அல்லவா என்றும், இந்த நிலத்தில் உனக்கு நீதியைச் சரிக்கட்டுவேன் என்றும் அப்பொழுது கர்த்தர் சொன்னாரே; இப்போதும் அவனை எடுத்து, கர்த்தருடைய வார்த்தையின்படியே இந்த நிலத்தில் எறிந்துபோடு என்றான்.

27 இதை யூதாவின் ராஜாவாகிய அகசியா கண்டு, தோட்டத்தின் வீட்டுவழியாய் ஓடிப்போனான்; யெகூ அவனைப் பின்தொடர்ந்து: அவனையும் இரதத்திலே வெட்டிப்போடுங்கள் என்றான்; அவர்கள் இப்லேயாம் கிட்ட இருக்கிற கூர்மலையின்மேல் ஏறுகிற வழியிலே அப்படிச் செய்தார்கள்; அவன் மெகிதோவுக்கு ஓடிப்போய் அங்கே செத்துப்போனான்.

28 அவனுடைய ஊழியக்காரர் அவனை இரதத்தின்மேல் எருசலேமுக்குக் கொண்டுபோய், அவனைத் தாவீதின் நகரத்தில் அவன் பிதாக்களோடு அவனுடைய கல்லறையிலே அடக்கம்பண்ணினார்கள்.

29 இந்த அகசியா, ஆகாபுடைய குமாரனாகிய யோராமின் பதினோராம் வருஷத்தில் யூதாவின்மேல் ராஜாவானான்.