2 சாமுவேல் 14:7-13 தமிழ்

7 வம்சத்தார் எல்லாரும் உம்முடைய அடியாளுக்கு விரோதமாய் எழும்பி, தன் சகோதரனைக் கொன்று போட்டவனை ஒப்பி; அவன் கொன்ற அவன் சகோதரனுடைய பிராணனுக்காக நாங்கள் அவனைக் கொன்றுபோடுவோம்; சுதந்தரவாளனாயினும் அவனையும் அழித்துப்போடுவோம் என்கிறார்கள். இப்படி என் புருஷனுக்குப் பேரும் நீதியும் பூமியின்மேல் வைக்கப்படாதபடிக்கு, எனக்கு இன்னும் மீதியாயிருக்கிற பொறியையும் அவித்துப்போட மனதாயிருக்கிறார்கள் என்றாள்.

8 ராஜா அந்த ஸ்திரீயைப் பார்த்து: நீ உன் வீட்டுக்குப் போ, உன் காரியத்தைக் குறித்து உத்தரவு கொடுப்பேன் என்றான்.

9 பின்னும் அந்தத் தெக்கோவாவூர் ஸ்திரீ ராஜாவைப் பார்த்து: ராஜாவாகிய என் ஆண்டவனே, ராஜாவின் மேலும் அவர் சிங்காசனத்தின்மேலும் குற்றமில்லாதபடிக்கு, அந்தப் பழி என்மேலும் என் தகப்பன் வீட்டின்மேலும் சுமரக்கடவது என்றாள்.

10 அதற்கு ராஜா: உனக்கு விரோதமாகப் பேசுகிறவனை என்னிடத்தில் கொண்டுவா; அப்பொழுது அவன் இனி உன்னைத் தொடாதிருப்பான் என்றான்.

11 பின்னும் அவள்: இரத்தப்பழி வாங்குகிறவர்கள் அழிம்பு செய்து, என் குமாரனை அதம்பண்ணப் பெருகிப்போகாதபடிக்கு, ராஜாவானவர் தம்முடைய தேவனாகிய கர்த்தரை நினைப்பாராக என்றாள். அதற்கு ராஜா: உன் குமாரனுடைய மயிரில் ஒன்றாவது தரையில் விழுவதில்லை என்று கர்த்தரின் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்.

12 அப்பொழுது அந்த ஸ்திரீ: ராஜாவாகிய என் ஆண்டவனோடே உமது அடியாள் ஒரு வார்த்தை சொல்ல உத்தரவாக வேண்டும் என்றாள். அவன்: சொல்லு என்றான்.

13 அப்பொழுது அந்த ஸ்திரீ: பின்னை ஏன் தேவனுடைய ஜனத்திற்கு விரோதமாய் இப்படிப்பட்ட நினைவை நீர் கொண்டிருக்கிறீர், துரத்துண்ட தம்முடையவனை ராஜா திரும்ப அழைக்காததினாலே, ராஜா இப்பொழுது சொன்ன வார்த்தையினால் குற்றமுள்ளவரைப்போல் இருக்கிறார்.