2 சாமுவேல் 15:20-26 தமிழ்

20 நீ நேற்றுதானே வந்தாய்; இன்று நான் உன்னை எங்களோடே நடந்துவரும்படிக்கு அழைத்துக்கொண்டு போகலாமா நான் போகக்கூடிய இடத்திற்குப் போகிறேன்; நீ உன் சகோதரரையும் அழைத்துகொண்டு திரும்பிப்போ; கிருபையும் உண்மையும் உன்னோடே இருப்பதாக என்றான்.

21 ஆனாலும் ஈத்தாய் ராஜாவுக்குப் பிரதியுத்தரமாக: ராஜாவாகிய என் ஆண்டவன் எங்கேயிருப்பாரோ, அங்கே உமது அடியானும், செத்தாலும் பிழைத்தாலும், இருப்பான் என்று கர்த்தருடைய ஜீவனையும் ராஜாவாகிய என் ஆண்டவனுடைய ஜீவனையும் கொண்டு சொல்லுகிறேன் என்றான்.

22 அப்பொழுது தாவீது ஈத்தாயை நோக்கி: நடந்துவா என்றான்; அப்படியே கித்தியனாகிய ஈத்தாயும் அவனுடைய எல்லா மனுஷரும் அவனோடிருக்கிற எல்லாப் பிள்ளைகளும் நடந்துபோனார்கள்.

23 சகல ஜனங்களும் நடந்துபோகிறபோது, தேசத்தார் எல்லாரும் மகா சத்தமாய் அழுதார்கள்; ராஜா கீதரோன் ஆற்றைக் கடந்தான்; ஜனங்கள் எல்லாரும் வனாந்தரத்திற்குப் போகிற வழியே நடந்துபோனார்கள்.

24 சாதோக்கும் தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டியை அவனோடேகூட இருந்து சுமக்கிற சகல லேவியரும் வந்து, தேவனுடைய பெட்டியை அங்கே வைத்தார்கள்; ஜனங்கள் எல்லாரும் நகரத்திலிருந்து கடந்து தீருமட்டும், அபியத்தார் திரும்பிப்போயிருந்தான்.

25 ராஜா சாதோக்கை நோக்கி: தேவனுடைய பெட்டியை நகரத்திற்குத் திரும்பக் கொண்டுபோ; கர்த்தருடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்ததானால், நான் அதையும் அவர் வாசஸ்தலத்தையும் பார்க்கிறதற்கு, என்னைத் திரும்ப வரப்பண்ணுவார்.

26 அவர்: உன்மேல் எனக்குப் பிரியமில்லை என்பாராகில், இதோ, இங்கே இருக்கிறேன்; அவர் தம்முடைய பார்வைக்கு நலமானபடி எனக்குச் செய்வாராக என்றான்.