1 தாவீது தன்னோடிருந்த ஜனங்களை இலக்கம் பார்த்து, அவர்கள்மேல் ஆயிரத்துக்கு அதிபதிகளையும், நூற்றுக்கு அதிபதிகளையும் வைத்து,
2 பின்பு தாவீது ஜனங்களில் மூன்றில் ஒரு பங்கை யோவாபின் வசமாகவும், மூன்றில் ஒரு பங்கைச் செருயாவின் குமாரனும் யோவாபின் சகோதரனுமான அபிசாயின் வசமாகவும், மூன்றில் ஒரு பங்கைக் கித்தியனாகிய ஈத்தாயின் வசமாகவும் அனுப்பி: நானும் உங்களோடேகூடப் புறப்பட்டு வருவேன் என்று ராஜா ஜனங்களிடத்தில் சொன்னான்.
3 ஜனங்களோ: நீர் புறப்படவேண்டாம்; நாங்கள் முறிந்தோடிப்போனாலும், அவர்கள் எங்கள் காரியத்தை ஒரு பொருட்டாக எண்ணமாட்டார்கள்; எங்களில் பாதிப்பேர் செத்துப்போனாலும், எங்கள் காரியத்தைப்பற்றிக் கவலைப்படமாட்டார்கள்; நீரோ, எங்களில் பதினாயிரம்பேருக்குச் சரி; நீர் பட்டணத்தில் இருந்துகொண்டு, எங்களுக்கு உதவி செய்கிறது எங்களுக்கு நலமாயிருக்கும் என்றார்கள்.
4 அப்பொழுது ராஜா அவர்களைப் பார்த்து: உங்களுக்கு நலமாய்த் தோன்றுகிறதைச் செய்வேன் என்று சொல்லி, ராஜா ஒலிமுகவாசல் ஓரத்திலே நின்றான்; ஜனங்கள் எல்லாரும் நூறுநூறாகவும், ஆயிரம் ஆயிரமாகவும் புறப்பட்டார்கள்.
5 ராஜா யோவாபையும், அபிசாயையும், ஈத்தாயையும் நோக்கி: பிள்ளையாண்டானாகிய அப்சலோமை என்னிமித்தம் மெதுவாய் நடப்பியுங்கள் என்று கட்டளையிட்டான்; இப்படி ராஜா அப்சலோமைக் குறித்து அதிபதிகளுக்கெல்லாம் கட்டளையிட்டதை ஜனங்கள் எல்லாரும் கேட்டிருந்தார்கள்.
6 ஜனங்கள் வெளியே இஸ்ரவேலருக்கு எதிராகப் புறப்பட்டபிற்பாடு, எப்பிராயீம் காட்டிலே யுத்தம் நடந்தது.
7 அங்கே இஸ்ரவேல் ஜனங்கள் தாவீதின் சேவகருக்கு முன்பாக முறிய அடிக்கப்பட்டார்கள்; அங்கே அன்றையதினம் இருபதினாயிரம்பேர் மடியத்தக்கதாக பெரிய சங்காரம் உண்டாயிற்று.