2 சாமுவேல் 19:28-34 தமிழ்

28 ராஜாவாகிய என் ஆண்டவனுக்கு முன்பாக என் தகப்பன் வீட்டார் எல்லாரும் சாவுக்கு ஏதுவாயிருந்தார்களே ஒழிய, மற்றப்படி அல்ல; ஆனாலும் உமது பந்தியிலே சாப்பிடுகிறவர்களோடே உமது அடியேனை வைத்தீர்; இன்னும் நான் ராஜாவிடத்தில் முறையிட, இனி எனக்கு என்ன நியாயம் இருக்கிறது என்றான்,

29 அப்பொழுது ராஜா அவனைப் பார்த்து: உன் காரியத்தைக் குறித்து அதிகமாய் பேசுவானேன்? நீயும் சீபாவும் நிலத்தைப் பங்கிட்டுக்கொள்ளுங்கள் என்று நான் சொல்லுகிறேன் என்றான்.

30 அதற்கு மேவிபோசேத் ராஜாவை நோக்கி: ராஜாவாகிய என் ஆண்டவன் சமாதானத்தோடே தம்முடைய வீட்டிற்கு வந்திருக்கும்போது, அவனே எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளட்டும் என்றான்.

31 கீலேயாத்தியனாகிய பர்சிலாவும் ரோகிலிமிலிருந்து வந்து, யோர்தான் மட்டும் ராஜாவை வழிவிட்டனுப்ப, அவனோடேகூட யோர்தானின் துறைமட்டும் கடந்து வந்தான்.

32 பர்சிலா எண்பது வயதுசென்ற கிழவனாயிருந்தான்; ராஜா மக்னாயீமிலே தங்கியிருக்குமட்டும் அவனைப் பராமரித்து வந்தான்; அவன் மகா பெரிய மனுஷனாயிருந்தான்.

33 ராஜா பர்சிலாவை நோக்கி: நீ என்னோடேகூடக் கடந்துவா, எருசலேமிலே உன்னை என்னிடத்தில் வைத்து பராமரிப்பேன் என்றான்.

34 பர்சிலா ராஜாவைப் பார்த்து: நான் ராஜாவோடேகூட எருசலேமுக்கு வர. நான் இன்னும் உயிரோடிருக்கும் ஆயுசின் நாட்கள் எம்மாத்திரம்?