4 அப்பொழுது அபியா எப்பிராயீம் மலைத்தேசத்திலுள்ள செமராயீம் என்னும் மலையின்மேல் ஏறி நின்று: யெரொபெயாமே, எல்லா இஸ்ரவேலரே, கேளுங்கள்.
5 இஸ்ரவேலை என்றைக்கும் ஆளும் ராஜ்யபாரத்தை இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் தாவீதுக்கும் அவன் குமாரருக்கும் மாறாத உடன்படிக்கையாய்க் கட்டளையிட்டதை நீங்கள் அறியீர்களா?
6 ஆகிலும் தாவீதின் குமாரனாகிய சாலொமோனின் ஊழியக்காரனான யெரொபெயாம் என்னும் நேபாத்தின் குமாரன் எழும்பி, தன் எஜமானுக்கு விரோதமாகக் கலகம்பண்ணினான்.
7 பேலியாளின் மக்களாகிய வீணர் அவனோடேகூடி, சாலொமோனின் குமாரனாகிய ரெகொபெயாம் அவர்களை எதிர்க்கக்கூடாமல் வாலவயதும் திடனற்ற மனதுமாயிருக்கையில், அவனுக்கு விரோதமாய்த் தங்களைப் பலப்படுத்திக்கொண்டார்கள்.
8 இப்போதும் தாவீதுடைய குமாரன் கையிலிருக்கிற கர்த்தருடைய ராஜ்யத்திற்கு விரோதமாக நீங்கள் பெலன் கொள்ளலாமென்று நினைக்கிறீர்கள்; நீங்கள் ஏராளமான கூட்டம்; யெரொபெயாம் உங்களுக்கு தேவர்களாக உண்டாக்கின பொன் கன்றுக்குட்டிகளும் உங்களிடத்தில் இருக்கிறதே.
9 நீங்கள் ஆரோனின் குமாரராகிய கர்த்தருடைய ஆசாரியரையும், லேவியரையும் தள்ளிவிட்டு, தேசாதேசங்களின் ஜனங்களைப்போல உங்களுக்கு ஆசாரியர்களை உண்டுபண்ணவில்லையோ? இளங்காளையினாலும், ஏழு கடாக்களினாலும், தன்னைப் பிரதிஷ்டையாக்கும்படி வருகிற எவனும் தெய்வம் அல்லாதவைகளுக்கு ஆசாரியனாகிறானே.
10 எங்களுக்கோ கர்த்தரே தேவன்; நாங்கள் அவரைவிட்டு விலகவில்லை; கர்த்தருக்கு ஊழியஞ்செய்கிற ஆசாரியர்கள் ஆரோனின் குமாரரும், பணிவிடை செய்கிறவர்கள் லேவியருமாமே.