2 நாளாகமம் 33 தமிழ்

1 மனாசே ராஜாவாகிறபோது பன்னிரண்டு வயதாயிருந்து, ஐம்பத்தைந்து வருஷம் எருசலேமில் அரசாண்டான்.

2 கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் துரத்தின ஜாதிகளுடைய அருவருப்புகளின்படியே, அவன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.

3 அவன் தன் தகப்பனாகிய எசேக்கியா தகர்த்துப்போட்ட மேடைகளைத் திரும்பவும் கட்டி, பாகால்களுக்குப் பலிபீடங்களை எடுப்பித்து, விக்கிரகத்தோப்புகளை உண்டாக்கி, வானத்தின் சேனையையெல்லாம் பணிந்துகொண்டு, அவைகளைச் சேவித்து,

4 எருசலேமிலே என் நாமம் என்றென்றைக்கும் விளங்கும் என்று கர்த்தர் சொன்ன தம்முடைய ஆலயத்திலே பலிபீடங்களைக் கட்டி,

5 கர்த்தருடைய ஆலயத்தின் இரண்டு பிராகாரங்களிலும் வானத்தின் சேனைகளுக்கெல்லாம் பலிபீடங்களைக் கட்டினான்.

6 அவன் இன்னோம் குமாரரின் பள்ளத்தாக்கிலே தன் குமாரரைத் தீமிதிக்கப்பண்ணி, நாளும் நிமித்தமும் பார்த்து, பில்லிசூனியங்களை அநுசரித்து, அஞ்சனம் பார்க்கிறவர்களையும் குறிசொல்லுகிறவர்களையும் வைத்து, கர்த்தருக்குக் கோபமுண்டாக அவர் பார்வைக்கு மிகுதியும் பொல்லாப்பானதைச் செய்தான்.

7 இந்த ஆலயத்திலும், இஸ்ரவேல் கோத்திரங்களிலெல்லாம் நான் தெரிந்துகொண்ட எருசலேமிலும், என் நாமத்தை என்றென்றைக்கும் விளங்கப்பண்ணுவேன் என்றும்,

8 நான் மோசேயைக்கொண்டு இஸ்ரவேலுக்குக் கொடுத்த சகல நியாயப்பிரமாணத்திற்கும் கட்டளைகளுக்கும் நியாயங்களுக்கும் ஒத்தபடியே அவர்களுக்கு நான் கற்பித்தவைகளையெல்லாம் அவர்கள் செய்யச் சாவதானமாய் இருந்தார்களேயாகில், நான் இனி அவர்கள் காலை அவர்கள் பிதாக்களுக்கு நிலைப்படுத்திவைத்த தேசத்திலிருந்து விலகப்பண்ணுவதில்லையென்றும், தேவன் தாவீதோடும் அவன் குமாரனாகிய சாலொமோனோடும் சொல்லியிருந்த தேவனுடைய ஆலயத்தில்தானே, அவன் தான் பண்ணுவித்த விக்கிரகமாகிய சிலையை ஸ்தாபித்தான்.

9 அப்படியே கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக அழித்த ஜாதிகளைப் பார்க்கிலும், யூதாவும் எருசலேமின் குடிகளும் பொல்லாப்புச் செய்யதக்கதாய், மனாசே அவர்களை வழிதப்பிப்போகப்பண்ணினான்.

10 கர்த்தர் மனாசேயோடும் அவனுடைய ஜனத்தோடும் பேசினபோதிலும், அவர்கள் கவனிக்காதே போனார்கள்.

11 ஆகையால் கர்த்தர்: அசீரியா ராஜாவின் சேனாபதிகளை அவர்கள்மேல் வரப்பண்ணினார்; அவர்கள் மனாசேயை முட்செடிகளில் பிடித்து, இரண்டு வெண்கலச்சங்கிலியால் அவனைக் கட்டிப் பாபிலோனுக்குக் கொண்டுபோனார்கள்.

12 இப்படி அவன் நெருக்கப்படுகையில், தன் தேவனாகிய கர்த்தரை நோக்கிக் கெஞ்சி, தன் பிதாக்களின் தேவனுக்கு முன்பாக மிகவும் தன்னைத் தாழ்த்தினான்.

13 அவரை நோக்கி, அவன் விண்ணப்பம்பண்ணிக்கொண்டிருக்கிறபோது, அவர் அவன் கெஞ்சுதலுக்கு இரங்கி, அவன் ஜெபத்தைக் கேட்டு, அவனைத் திரும்ப எருசலேமிலுள்ள தன்னுடைய ராஜ்யத்திற்கு வரப்பண்ணினார்; கர்த்தரே தேவன் என்று அப்பொழுது மனாசே அறிந்தான்.

14 பின்பு அவன் தாவீதுடைய நகரத்தின் வெளி அலங்கத்தைக் கீயோனுக்கு மேற்கேயிருக்கிற பள்ளத்தாக்கு தொடங்கி மீன்வாசல்மட்டும் கட்டி, ஓபேலைச் சுற்றிலும் அதை வளைத்து, அதை மிகவும் உயர்த்தி, யூதாவிலுள்ள அரணான பட்டணங்களிலெல்லாம் இராணுவத்தலைவரை வைத்து,

15 கர்த்தருடைய ஆலயத்திலிருந்து அந்நிய தேவர்களையும் அந்த விக்கிரகத்தையும் எடுத்துப்போட்டு, கர்த்தருடைய ஆலயமுள்ள மலையிலும் எருசலேமிலும் தான் கட்டியிருந்த எல்லாப் பலிபீடங்களையும் அகற்றி, பட்டணத்திற்குப் புறம்பாகப் போடுவித்து,

16 கர்த்தருடைய பலிபீடத்தைச் செப்பனிட்டு, அதின்மேல் சமாதானபலிகளையும் ஸ்தோத்திர பலிகளையும் செலுத்தி, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைச் சேவிக்கவேண்டும் என்று யூதாவுக்குக் கட்டளையிட்டான்.

17 ஆகிலும் ஜனங்கள் இன்னும் மேடைகளில் பலியிட்டுவந்தார்கள்; என்றாலும் தங்கள் தேவனாகிய கர்த்தருக்கென்றே அப்படிச் செய்தார்கள்.

18 மனாசேயின் மற்ற வர்த்தமானங்களும், அவன் தன் தேவனை நோக்கிப் பண்ணின விண்ணப்பமும், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் நாமத்தில் அவனோடே பேசின ஞானதிருஷ்டிக்காரரின் வார்த்தைகளும், இஸ்ரவேல் ராஜாக்களின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது.

19 அவனுடைய விண்ணப்பமும், அவன் கெஞ்சுதலுக்குக் கர்த்தர் இரங்கினதும், அவன் தன்னைத் தாழ்த்தினதற்கு முன்னே பண்ணின அவனுடைய எல்லாப் பாவமும் துரோகமும், அவன் மேடைகளைக் கட்டி விக்கிரகத் தோப்புகளையும் சிலைகளையும் ஸ்தாபித்த இடங்களும், ஓசாயின் பிரபந்தத்தில் எழுதியிருக்கிறது.

20 மனாசே தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின்பு, அவனை அவன் வீட்டிலே அடக்கம் பண்ணினார்கள்; அவன் குமாரனாகிய ஆமோன் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

21 ஆமோன் ராஜாவாகிறபோது இருபத்திரண்டு வயதாயிருந்து, இரண்டு வருஷம் எருசலேமில் அரசாண்டான்.

22 அவன் தன் தகப்பனாகிய மனாசே செய்ததுபோல கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; தன் தகப்பனாகிய மனாசே பண்ணுவித்திருந்த விக்கிரகங்களுக்கெல்லாம் ஆமோன் பலியிட்டு, அவைகளைச் சேவித்தான்.

23 தன் தகப்பனாகிய மனாசே தன்னைத் தாழ்த்திக்கொண்டதுபோல, இந்த ஆமோன் என்பவன் கர்த்தருக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்தாமல் மேன்மேலும் அக்கிரமம் செய்துவந்தான்.

24 அவன் ஊழியக்காரர் அவனுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணி, அவன் அரமனையிலே அவனைக் கொன்று போட்டார்கள்.

25 அப்பொழுது தேசத்து ஜனங்கள் ஆமோன் என்னும் ராஜாவுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணின யாவரையும் வெட்டிப்போட்டு, அவன் குமாரனாகிய யோசியாவை அவன் ஸ்தானத்தில் ராஜாவாக்கினார்கள்.

அத்தியாயங்கள்

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36