2 நாளாகமம் 34:9-15 தமிழ்

9 அவர்கள் பிரதான ஆசாரியனாகிய இல்க்கியாவினிடத்தில் வந்து, வாசற்படியைக் காக்கிற லேவியர் மனாசேயிலும் எப்பிராயீமிலும் இஸ்ரவேலில் மீதியானவர்களெல்லாரின் கையிலும் யூதா பென்யமீன் எங்கும் சேர்த்து, எருசலேமுக்குத் திரும்பி தேவனுடைய ஆலயத்திற்குக் கொண்டுவந்த பணத்தை ஒப்புவித்து,

10 வேலையைச் செய்விக்கும்படி, கர்த்தருடைய ஆலயத்தின் விசாரிப்புக்காரரானவர்களின் கையில் அதைக் கொடுத்தார்கள்; இவர்கள் அதைக் கர்த்தருடைய ஆலயத்தைப் பழுதுபார்த்துச் சீர்ப்படுத்துகிறதற்கு ஆலயத்தில் வேலை செய்கிறவர்கள் கையிலே கொடுத்தார்கள்.

11 அப்படியே யூதாவின் ராஜாக்கள் கெடுத்துப்போட்ட அறைகளைப் பழுதுபார்க்க வெட்டின கற்களையும், இணைப்புக்கு மரங்களையும், பாவுகிறதற்குப் பலகைகளையும் வாங்கத் தச்சருக்கும் சிற்பாசாரிகளுக்கும் அதைக் கொடுத்தார்கள்.

12 இந்த மனுஷர் வேலையை உண்மையாய்ச் செய்தார்கள்; வேலையை நடத்த மெராரியின் புத்திரரில் யாகாத் ஒபதியா என்னும் லேவியரும், கோகாதியரின் புத்திரரில் சகரியாவும், மெசுல்லாமும் அவர்கள்மேல் விசாரிப்புக்காரராயிருந்தார்கள்; இந்த லேவியர் எல்லாரும் கீதவாத்தியங்களை வாசிக்க அறிந்தவர்கள்.

13 அவர்கள் சுமைகாரரை விசாரிக்கிறவர்களாயும், பற்பல வேலைகளைச் செய்கிறவர்கள் எல்லாரையும் கண்காணிக்கிறவர்களாயும் இருந்தார்கள்; லேவியரில் இன்னும் சிலர் கணக்கரும் மணியக்காரரும் வாசற்காவலாளருமாயிருந்தார்கள்.

14 கர்த்தருடைய ஆலயத்துக்குக் கொண்டுவரப்பட்ட பணத்தை அவர்கள் எடுக்கிறபோது மோசேயைக்கொண்டு கட்டளையிடப்பட்ட கர்த்தருடைய நியாயப்பிரமாணப் புஸ்தகத்தை ஆசாரியனாகிய இல்க்கியா கண்டெடுத்தான்.

15 அப்பொழுது இல்க்கியா சம்பிரதியாகிய சாப்பானை நோக்கி: கர்த்தருடைய ஆலயத்திலே நியாயப்பிரமாணப்புஸ்தகத்தைக் கண்டெடுத்தேன் என்று சொல்லி, அந்தப் புஸ்தகத்தைச் சாப்பான் கையில் கொடுத்தான்.