2 நாளாகமம் 36:9-15 தமிழ்

9 யோயாக்கீன் ராஜாவாகிறபோது எட்டு வயதாயிருந்து, மூன்று மாதமும் பத்து நாளும் எருசலேமில் அரசாண்டு, கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.

10 மறுவருஷத்தின் ஆரம்பத்திலே நேபுகாத்நேச்சார் என்னும் ராஜா அவனையும், கர்த்தருடைய ஆலயத்தின் திவ்வியமான பணிமுட்டுகளையும் பாபிலோனுக்குக் கொண்டுவரப்பண்ணி, அவன் சிறிய தகப்பனாகிய சிதேக்கியாவை யூதாவின்மேலும் எருசலேமின்மேலும் ராஜாவாக்கினான்.

11 சிதேக்கியா ராஜாவாகிறபோது இருபத்தொரு வயதாயிருந்து, பதினோரு வருஷம் எருசலேமில் அரசாண்டு,

12 தன் தேவனாகிய கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; அவன் கர்த்தருடைய வாக்கை உரைத்த எரேமியா என்கிற தீர்க்கதரிசிக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்தவில்லை.

13 தேவன்மேல் தன்னை ஆணையிடுவித்துக்கொண்ட நேபுகாத்நேச்சார் என்னும் ராஜாவுக்கு விரோதமாய்க் கலகம்பண்ணி, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரிடத்துக்குத் திரும்பாதபடிக்கு, தன் கழுத்தை அழுத்தமாக்கி, தன் இருதயத்தைக் கடினப்படுத்தினான்.

14 ஆசாரியரில் பிரதானமானவர்கள் யாவரும் ஜனங்களும் கூடிப் புறஜாதிகளுடைய சகல அருவருப்புகளின்படியும் மிகவும் துரோகம்பண்ணி, கர்த்தர் எருசலேமிலே பரிசுத்தம்பண்ணின அவருடைய ஆலயத்தை தீட்டுப்படுத்தினார்கள்.

15 அவர்களுடைய பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் தமது ஜனத்தையும் தமது வாசஸ்தலத்தையும் காப்பதற்கான இரக்கமுள்ளவராயிருந்தபடியால், அவர்களிடத்துக்குத் தம்முடைய ஸ்தானாபதிகளை ஏற்கெனவே அனுப்பினார்.