ஆமோஸ் 9:4-10 தமிழ்

4 அவர்கள் தங்கள் சத்துருவுக்கு முன்பாகச் சிறைப்பட்டுப்போனாலும், அங்கே அவர்களைக் கொன்றுபோட பட்டயத்துக்கு நான் கட்டளையிட்டு, என் கண்களை அவர்கள்மேல் நன்மைக்கல்ல, தீமைக்கென்றே வைப்பேன்.

5 சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் தேசத்தைத் தொட, அது உருகிப்போகும்; அப்பொழுது அதின் குடிகளெல்லாரும் புலம்புவார்கள்; எங்கும் நதியாய்ப் புரண்டோடி, எகிப்தினுடைய ஆற்று வெள்ளத்தைப்போல் வெள்ளமாகும்.

6 அவர் வானத்தில் தமது மேலறைகளைக் கட்டி, பூமியில் தமது கீழறைகளை அஸ்திபாரப்படுத்தி, சமுத்திரத்தின் தண்ணீர்களை வரவழைத்து, அவைகளைப் பூமியினுடைய விசாலத்தின்மேல் ஊற்றுகிறவர்; கர்த்தர் என்பது அவருடைய நாமம்.

7 இஸ்ரவேல் புத்திரரே, நீங்கள் எனக்கு எத்தியோப்பியரின் புத்திரரைப்போல் இருக்கிறீர்கள் அல்லவோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் இஸ்ரவேலை எகிப்து தேசத்திலிருந்தும், பெலிஸ்தரைக் கப்தோரிலிருந்தும், சீரியரைக் கீரிலிருந்தும் கொண்டுவரவில்லையோ?

8 இதோ, கர்த்தராகிய ஆண்டவரின் கண்கள் பாவமுள்ள ராஜ்யத்துக்கு விரோதமாக வைக்கப்பட்டிருக்கிறது; அதை பூமியின்மேல் இராதபடிக்கு அழித்துப்போடுவேன்; ஆகிலும் யாக்கோபின் வம்சத்தை முழுவதும் அழிக்கமாட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

9 இதோ, ஜல்லடையினால் சலித்தரிக்கிறதுபோல் இஸ்ரவேல் வம்சத்தாரை எல்லா ஜாதிகளுக்குள்ளும் சலித்தரிக்கும்படிக்கு நான் கட்டளையிடுவேன்; ஆனாலும் ஒரு கோதுமை மணியும் தரையிலே விழுவதில்லை.

10 தீங்கு எங்களை அணுகுவதுமில்லை, எங்களுக்கு நேரிடுவதுமில்லையென்று என் ஜனத்தில் சொல்லுகிற பாவிகளெல்லாரும் பட்டயத்தினால் சாவார்கள்.