எசேக்கியேல் 26:15-21 தமிழ்

15 தீருவுக்குக் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்: காயம்பட்டவர்கள் அலறும்போதும், உன் நடுவில் சங்காரம் நடக்கும்போதும், நீ விழுகிற சத்தத்தினால் தீவுகள் அதிராதோ?

16 கடலரசர் எல்லாரும் தங்கள் சிங்காசனங்களைவிட்டு இறங்கி; தங்கள் சால்வைகளைக் கழற்றி, தங்கள் சித்திரத்தையலாடைகளை உரிந்துபோடுவார்கள்; நடுக்கமே அவர்கள் உடையாகும்; தரையிலே உட்கார்ந்து, நிமிஷந்தோறும் தத்தளித்து, உன்னிமித்தம் பிரமிப்பார்கள்.

17 அவர்கள் உன்னிமித்தம் புலம்பி, உன்னைக்குறித்து: கடல் சஞ்சாரிகள் குடியிருந்த புகழ்பெற்ற நகரியே, ஐயோ! உன்னில் தங்கினவர்களுக்கெல்லாம் பயமுண்டாக்கின உன் குடிகளோடுங்கூடச் சமுத்திரத்திலே பலத்திருந்த நீ அழிந்துபோனாயோ!

18 நீ விழும் நாளில் தீவுகள் தத்தளிக்கும்; நீ அகன்றுபோகும்போது சமுத்திரத்திலுள்ள தீவுகள் கலங்கும் என்பார்கள்.

19 கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் உன்னைக் குடியில்லாத நகரங்களைப்போலப் பாழானநகரமாக்கும்போதும், மிகுந்த தண்ணீர்கள் உன்னை மூடத்தக்கதாய் நான் உன்மேல் சமுத்திரத்தை வரப்பண்ணும்போதும்,

20 பூர்வகாலத்து ஜனத்தண்டைக்குக் குழியில் இறங்குகிறவர்களோடே நான் உன்னை இறங்கப்பண்ணுவேன்; நீ குடியேறாதிருக்கும்படி பூர்வகாலமுதற்கொண்டு பாழாயிருக்கிற பூமியின் தாழ்விடங்களிலே குழியில் இறங்குகிறவர்ளோடேகூட நான் உன்னைத் தங்கியிருக்கப்பண்ணுவேன்; ஜீவனுள்ளோருடைய தேசத்திலோ மகிமை விளங்கச்செய்வேன்.

21 உன்னை மகா பயங்கரமாக வைப்பேன்; இனி நீ இருக்கமாட்டாய்; நீ தேடப்பட்டாலும் இனி என்றைக்கும் காணப்படமாட்டாய் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்றார்.