எசேக்கியேல் 32:22-28 தமிழ்

22 அங்கே அசூரும் அவனுடைய எல்லாக் கூட்டத்தாரும் கிடக்கிறார்கள்; அவனைச் சுற்றிலும் அவர்களுடைய பிரேதக்குழிகள் இருக்கிறது; அவர்கள் எல்லாரும் பட்டயத்தால் வெட்டுண்டு விழுந்தவர்கள்தானே.

23 பாதாளத்தின் பக்கங்களில் அவர்களுடைய பிரேதக்குழிகள் இருக்கிறது; அவனுடைய பிரேதக்குழியைச் சுற்றிலும் அவனுடைய கூட்டம் கிடக்கிறது, ஜீவனுள்ளோருடைய தேசத்திலே கெடியுண்டாக்கின அவர்களெல்லாரும் பட்டயத்தால் வெட்டுண்டு விழுந்தவர்கள்தானே.

24 அங்கே ஏலாமும் அவனுடைய பிரேதக்குழியைச் சுற்றிலும் அவனுடைய எல்லா ஏராளமான ஜனமும் கிடக்கிறார்கள்; அவர்களெல்லாரும் பட்டயத்தால் வெட்டுண்டு விழுந்து, விருத்தசேதனமில்லாதவர்களாய் பூமியின் தாழ்விடங்களில் இறங்கினார்கள்; ஜீவனுள்ளோருடைய தேசத்திலே கெடியுண்டாக்கின அவர்கள், குழியில் இறங்கினவர்களோடேகூடத் தங்கள் அவமானத்தைச் சுமக்கிறார்கள்.

25 வெட்டுண்டவர்களின் நடுவே அவனை அவனுடைய எல்லா ஏராளமான ஜனத்துக்குள்ளும் கிடத்தினார்கள்; அவனைச் சுற்றிலும் அவர்களுடைய பிரேதக்குழிகள் இருக்கிறது; அவர்களெல்லாரும் பட்டயத்தால் வெட்டுண்ட விருத்தசேதனமில்லாதவர்கள்; ஜீவனுள்ளோருடைய தேசத்திலே அவர்கள் கெடியுண்டாக்கினவர்களாயிருந்தும், அவர்கள் குழியில் இறங்கினவர்களோடேகூடத் தங்கள் அவமானத்தைச் சுமக்கிறார்கள்; அவன் வெட்டுண்டவர்களின் நடுவே வைக்கப்பட்டிருக்கிறான்.

26 அங்கே மேசேக்கும் தூபாலும் அவர்களுடைய ஏராளமான ஜனங்களும் கிடக்கிறார்கள்; அவர்களைச் சுற்றிலும் அவர்களுடைய பிரேதக்குழிகள் இருக்கிறது; அவனுடைய ஜீவனுள்ளோருடைய தேசத்திலே கெடியுண்டாக்கினவர்களாயிருந்தும், அவர்களெல்லாரும் விருத்தசேதனமில்லாதவர்கள்; பட்டயத்தால் வெட்டுண்டு விழுவார்கள்.

27 ஜீவனுள்ளோருடைய தேசத்திலே பராக்கிரமசாலிகளுக்குக் கெடியுண்டாக்குகிறவர்களாயிருந்தும், அவர்கள் விருத்தசேதனமில்லாதவர்களாய் விழுந்து, தங்கள் யுத்த ஆயுதங்களோடு பாதாளத்திலிறங்கின பராக்கிரமசாலிகளோடே இவர்கள் கிடப்பதில்லை; அவர்கள் தங்கள் பட்டயங்களைத் தங்கள் தலைகளின்கீழ் வைத்தார்கள்; ஆனாலும் அவர்களுடைய அக்கிரமம் தங்கள் எலும்புகளின்மேல் இருக்கும்.

28 நீயும் விருத்தசேதனமில்லாதவர்களின் நடுவே நொறுங்குண்டு, பட்டயத்தால் வெட்டுண்டவர்களோடே கிடப்பாய்.